பாராக்ளீட்டஸ் (Parakletos):-

யோவா 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/rTd4z6BVqtA

பாராக்ளீட்டஸ் என்ற கிரேக்க பதத்தின் அர்த்தம் எப்பொழுதும் பக்கபலமாய் கூடவே இருப்பவர் என்பது அர்த்தம். அது இயேசு வாக்குத்தத்தம்பண்ணின பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறது. இயேசு பிரசங்கித்த கடைசி பிரசங்கங்கள் பரிசுத்த ஆவியானவரை பற்றி தான் அதிகமாய் காணப்படுகிறது. பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இந்த பூமியில் இறங்கி வந்தார் . இன்று நம்மோடு பக்கபலமாய் கூடவே இருப்பவர் பரிசுத்த ஆவியானவர் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அநேக குழப்பமான நேரத்தில், என்ன தீர்மானம் எடுக்க வேண்டும் என்ற சூழலில் அகப்படும்போது, என்ன ஜெபிக்க வேண்டும் என்று நாம் அறியாதவர்களாக திகைத்துப்போய் நிற்கிற சூழ்நிலைகள் வரும். அப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் நமக்கு பக்கபலமாய் நின்று வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு விண்ணப்பம் பண்ணுகிறவர் பரிசுத்த ஆவியானவர்.

சில நேரங்களில் வேதாகமத்தில் எழுதியிருப்பவைகளை புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை வருகிறது. அப்பொழுது இந்த வேதாகமத்தை எழுதிய ஆக்கியோனாகிய பரிசுத்த ஆவியானவர் நமக்கு பக்கபலமாய் இருந்து வேதத்தின் இரகசியங்களை கற்றுக்கொடுப்பார். தமிழ் புத்தகமாய் இருந்தாலும், ஆங்கில புத்தகமாய் இருந்தாலும், அறிவியல் வேதியியல் புத்தகமாய் இருந்தாலும் அதை முழுவதுமாக புரிந்துகொள்ளுபவர் அந்த புத்தகத்தை எழுதியவர் மாத்திரமே. அதுபோல தான் வேதத்தை எழுதி, வேதத்தின் இரகசியங்கள் அனைத்தையும் அறிந்த பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே, புரிந்துகொள்ள முடியாத கடினமான பகுதிகளை நமக்கு விளக்கி கூறுவார்.

விரும்புவதை செய்யாமல் விரும்பாததையே செய்கிறேன் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு உதவி செய்வதற்காகவே, நமக்கு பக்கபலமாய் இருப்பதற்கு, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் எவ்வேளையிலும் நமக்கு உதவி செய்ய ஆவலோடும் ஆயத்தத்தோடும் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரே எனக்கு பக்கபலமாய் இருப்பீராக என்று எப்பொழுது அவரை நோக்கி கூப்பிடுகிறீர்களோ, அந்த நேரத்திலே உங்களை அவர் அபிஷேகத்தால் நிரப்பிவிடுவார்.

சத்துரு வெள்ளம்போல வருவான். அவன் உங்களோடு செய்கிற யுத்தம் கடினமாக தான் இருக்கும். போட்டி பலமாய் காணப்படும். கொடூரமாக தாக்குவதற்கு அவன் பல வகைகளில் முயற்சி செய்வான். ஆனால் நமக்கு பக்கபலமாய் இருக்கிற கர்த்தருடைய ஆவியானவர் தாமே நமக்காக கொடியேற்றுவார். முடிவில் வெற்றி நமக்கே உரியது, காரணம், பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல, கர்த்தருடைய ஆவியினாலேயே எல்லாம் ஆகும்.

அநேக நேரங்களில் சோர்வும் சோகமான சூழ்நிலைகளும் வருவதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களிலும் நமக்கு பக்கபலமாய் இருப்பவர் பேரின்ப நதி என்றழைக்கப்படும் பரிசுத்த ஆவியானவர். அவர் மனக்காயங்களை ஆற்றுவார்; ஆனந்த தைல அபிஷேகத்தால் உங்கள் ஒவ்வொருவரையும் நிரப்புவார். மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகிறவர் பரிசுத்த ஆவியானவர் மாத்திரமே என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அதுபோல பயம் வருகிற சூழ்நிலைகளும் வரும். அந்நேரங்களில் பலமும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியானவர் உங்களுக்கு பக்கபலமாய் இருப்பார். அவர் உங்கள் மேலும், உங்களோடும், உங்களுக்குள்ளும் வாசம் செய்ய விட்டுகொடுப்பீர்களென்றால், அவர் கொடுக்கும் வல்லமை பெரிதாய் இருக்கும். ஆவியானவர் தன்னுடைய வரங்களினால் உங்களை நிறைந்து கனியுள்ள வாழ்க்கை வாழும்படியாக செய்வார். ஆகையால், உங்களுக்கு பக்கபலமாக பரிசுத்த ஆவியானவர் உங்களோடு கூட இருக்கிறார். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு துணை செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *