ஒரு நாளும் ஆயிரம் வருஷமும் (1 day and 1000 years).

2 பேது 3:8. பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ah2xfVtY50E

சிலர் கொஞ்சநாள் கழித்து ஒரு பையனை பார்க்கும் போது சொல்லுவார்கள், இவன் இப்பொழுது தான் பிறந்த மாதிரி இருக்கிறது, ஆனால் இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்துவிட்டான் என்பதாக. சிலர் சொல்லுவார்கள், இப்பொழுது தான் 2024 வது வருடம் ஆரம்பித்ததுபோல இருக்கிறது, ஆனால் ஆறு மாதங்கள் கடந்துபோய்விட்டது என்பதாக. சிலர் சொல்லுவார்கள் இப்பொழுது தான் கல்லூரி படிப்பை ஆரம்பித்ததுபோல இருக்கிறது, ஆனால் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கும் போக ஆரம்பித்துவிட்டோம் என்பதாக. அதுபோல தான் நம் ஆண்டவருக்கு அவருடைய பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது (சங் 90:4). ஆண்டவரை பொறுத்தவரையில் அவருக்கு ஒரு வருஷம் என்பது நாம் எட்டு மணிநேரம் வேலைக்கு கடந்து செல்வதைப்போலவும், எட்டு மணிநேரம் தூங்குவதை போலவும் தான் காணப்படும். காரணம் அவர் நித்தியமானவர். என்றென்றும் உயிரோடிருக்கிறவர்.

ஆயிரம் வருஷம் என்பதை நாம் கணக்கிடுவதும், தேவன் கணக்கிடுவதும் வித்தியாசமானவைகள். ஒரு காரியத்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேற்ற ஆயிரம் வருஷங்கள் தேவைப்படும் என்று நாம் நினைத்திருக்கையில், ஆண்டவர் அவற்றை ஒரு நாளில் நிறைவேற்றி முடித்துவிடுவார். ஒரு நாளில் இந்த காரியம் நிறைவேறும் என்று நாம் நினைக்கையில், அதை நிறைவேற்ற ஆயிரம் வருஷங்களையும் கர்த்தர் எடுத்துக்கொள்ளுவார். காரணம் நம்முடைய நினைவுகள் அவருடைய நினைவுகள் அல்ல; அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகளுமல்ல. கடைசிகாலமும், கர்த்தருடைய நாளும் வரப்போகிறது என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அப்போஸ்தலர்கள் மூலம் ஆவியானவர் சொன்னாலும், அந்த கடைசி காலம் நிறைவேற ஆண்டவர் எடுத்துக்கொள்ளுகிற காலம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. காரணம் ஆண்டவரை பொறுத்தவரையில் அவர் சொன்ன கடைசி காலம் என்பது வெறும் இரண்டு நாள் மாத்திரமே.

அதுபோல ஆண்டவருடைய ஆயிரவருஷ அரசாட்சியும் அவருக்கு ஒரு நாளை போல கடந்துபோகும். அந்த ஆயிரவருஷ அரசாட்சியில் சாத்தான் கட்டப்படுவான், நாம் எல்லாரும் கிறிஸ்துவோடு கூட அரசாளுவோம், தேவனுடைய ஜனங்கள் இளைப்பாறுதலை அனுபவிப்பார்கள். ஆயிர வருஷ அரசாட்சியின் முடிவில் சாத்தான் கொஞ்ச காலத்திற்கு விடுதலையாக்கப்பட்டு, அவனை யுகா யுகமாக அக்கினிக்கடலில் போட்டுவிடுவார். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார் (1 கொரி 15:24). காலங்களையும் சமயங்களையும் தன்னுடைய கரத்தில் வைத்திருப்பவருக்கு ஆயிரம் வருஷம் என்பது ஒரு நாளை போல காணப்படுகிறது. அதுபோல உங்கள் வாழ்க்கையில் தாமதமாகிக்கொண்டிருக்கிற ஆசீர்வாதங்கள், பல வருடங்களாகியும் நன்மை உண்டாகவில்லை என்று சொல்லுகிற காரியங்களில், உங்களுக்கு அற்புதத்தை செய்ய அவருக்கு ஒரு நாளும் ஒரு நிமிடமும், ஒரு வினாடியும் போதுமானது. முடிவும் துவக்கமும் இல்லாத ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் சீக்கிரத்தில் அற்புதம் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *