அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். ஆமோஸ் 9:12
கர்த்தர் நம்மை கட்டுகிறவர். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை, குடும்ப வாழ்க்கையை திரும்ப, திரும்ப கட்டுகிறவர். கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங்.127:1) என்று வேதம் சொல்லுகிறது. சிலவேளைகளி ல் ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையை அழகாக கட்டுவதற்கு நாம் விட்டுகொடாதபடி, நாமே குடும்பம் என்னும் கூடாரத்தை கட்ட பிரயாசப்படுகிறோம். ஆகையால், நம்முடைய பிரயாசங்கள் விருதாவாக போய்விடுகிறது. எப்படி ஜனங்கள் தாங்களாகவே பாபேல் கோபுரத்தை கட்ட துவங்கி, கடைசியில் குழப்பத்திலும் பிரிவினையிலும், முடிந்ததோ, அதுபோல குடும்பங்களில் குழப்பங்களும் பிரிவினைகளும் வந்து விடுகிறது.
சத்துருவும் குடும்பம் என்னும் கூடாரத்தை இடித்துதள்ள எப்பொழுதும் முயற்ச்சிக்கிறவன். குறிப்பாக கர்த்தருடைய பிள்ளைகளுடைய குடும்பத்தில் பிரிவினைகளை கொண்டுவந்து, தேவனுடைய சமூகத்தில் உடன்படிக்கையோடு துவங்கின நல்ல உறவுகளை, இடித்து தள்ள முயற்சிக்கிறவன். ஏதேனில் ஆதிப்பெற்றோராகிய ஆதாம், ஏவாளுக்குள்ளாக குற்ற உணர்வை உருவாக்கி, ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தும்படி தூண்டிவிட்டான். அதே ஆயுதத்தை இந்நாட்களிலும் பயன்படுத்துகிறான். அவனுடைய நோக்கம் எல்லாம் குடும்பம் என்னும் கூடாரம் இடிக்கப்படவேண்டும், அதனிமித்தம் சபை என்னும் குடும்பத்தை வீழ்த்திவிடவேண்டும். வேதம் குடும்பத்தையும், சபையையும் ஒப்பிட்டு கூறுகிறது (எபே. 5:21-31).
தாவீதிற்கு நிலையான வீட்டை கட்டுவேன் என்பது கர்த்தருடைய வாக்குதத்தம். ஆனால் அவன் குமாரனாகிய சாலோமோன் அனேக அந்நிய ஸ்திரீகளை விவாகம் செய்து, தேவ திட்டத்தை விட்டு விலகினதால், அவன் நாட்களுக்கு பின்பு இஸ்ரவேல் தேசம் யூதா, இஸ்ரவேல் என்று இரண்டாக பிரிந்தது. யூதாவிலும் இஸ்ரவேலிலும் அனேக ராஜாக்கள் ஆட்சிசெய்தபின்பு, யூதா பாபிலோனின் அடிமைதனத்திற்குள்ளாக கடந்துசென்றது. இஸ்ரவேல் அசீரியர்களின் அடிமைதனத்தற்குள்ளாக சென்றது. தேவனுடைய வாக்குத்தத்தம் தோல்வியில் முடிந்தது என்று சத்துரு நினைத்தவேளையில், இயேசு தாவீதின் குமாரனாக தோன்றி, அந்த வாக்குத்தத்தம் என்றென்றும் நிலைத்திருக்கும்படி செய்தார்.
வாக்குத்தத்தில் உண்மையுள்ள தேவன், உங்கள் கூடாரத்தை திரும்ப எடுத்து கட்டுவேன் என்று இன்று உங்களுக்கு வாக்களிக்கிறார். விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை திரும்ப எடுத்துகட்டின தேவன், உங்கள் வீட்டையும் எடுத்து கட்டுவார். திறப்புகள் தோன்றி, பழுதாய் போயிருக்கலாம். ஆனால் நம்முடைய நல்ல ஆண்டவர் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி உங்கள் வாழ்க்கையை திரும்பவும் அழகாக எடுத்து கட்ட வல்லமையுள்ளவர். மனம் கலங்காதிருங்கள்.
இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய். மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய் (எரே. 31:4), என்று வாக்களித்த தேவன், உங்களையும் மகிழப்பண்ணுவார். மீண்டும் மகிழ்ச்சியுள்ள குடும்ப வாழ்க்கையை கர்த்தர் உங்களுக்கு நிச்சயமாகவே தந்தருளுவார்.
கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக! ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org