சங் 102:21,22 கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில், சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/lmcuCIMnYjU
சீயோன் என்றால் பலருக்கு பல விதமான கேள்விகள் வருகிறது. சில பாரம்பரிய சபைகள் தாங்கள் சீயோனை சேர்ந்தவர்களா என்ற கேள்வியில் இருக்கிறார்கள். சில ஆவிக்குரிய மிதமிஞ்சிய சபைகள் தாங்கள் மட்டும் தான் சீயோன் சபை என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள். இப்படியிருக்க ஆவிக்குரிய சத்தியம் என்னவென்றால் நீங்கள் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய சீயோனை சேர்ந்தவர்கள். சங்கீதம் 102ல் மூன்று வகையான சீயோனை குறித்து வேதம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. முதலாவது சீயோன், பரலோக சீயோன். கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்(சங் 102:15). பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார் (சங் 50:2). இரண்டாவது வகையான சீயோன் பூலோக சீயோன். தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது (சங் 102:13). இது தாவீதின் நகரமாகிய எருசலேமை குறிக்கிறது. இந்த எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளவேண்டியது நமது கடமை என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இயேசுவின் இரண்டாம் வருகையில் இயேசுவின் பாதம் வந்து அமரும் இடம் இந்த சீயோன் தான் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். மூன்றாவதாக, சபையாகிய நீங்களும் நானும் சீயோன் என்று அழைக்கப்படுகிறோம். கர்த்தருக்கு ஆராதனை செய்பவர்கள் சீயோனை சேர்ந்தவர்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக வாழ்வீர்களென்றால், நீங்கள் தான் ஆவிக்குரிய சீயோன்.
சீயோன் என்றழைக்கப்படும் நீங்கள் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள் (1 பேது 2:5). கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார் (சங் 87:2). தேவ ஜனங்களாகிய சபை சீயோன் என்று அழைக்கப்படுவதால் உங்களில் தேவன் பிரியமாய் இருக்கிறார். கர்த்தருடைய பிரியம் உங்கள் மேல் இருக்கிறது. இப்படி கர்த்தரை தெய்வமாக கொண்ட நீங்கள் பாக்கியவான்கள். உலகத்தில் பல விதமான ஜனங்கள் பல பெயர்களில் இருக்கிறார்கள். அவர்களில் சீயோனை சேர்ந்தவர்கள் பாக்கியமுள்ளவர்கள். இந்த ஆவிக்குரிய சீயோனாகிய உங்களுக்காக கர்த்தர் சீயோன் மலையில் வந்து இறங்கப்போகிறார்.
பரலோக சீயோனுக்காக, பூமியில் எழுத்தின்படி இருக்கும் தாவீதின் நகரமாகிய சீயோனும், ஆவிக்குரிய சீயோனாகிய தேவனுடைய சபையும் இன்று ஆயத்தமாகிக்கொண்டு இருக்கிறது. கடைசிமட்டும் கர்த்தருடைய வசனத்தில் நிலைத்திருந்து ஆவிக்குரிய சீயோனாக உங்களை காத்துக்கொள்ளுங்கள். காரணம் இயேசு சீக்கிரம் சீயோனை சேர்ந்தவர்களை சேர்த்துக்கொள்ள வரப்போகிறார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org