1 தீமோ 2:8 அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன். (எபே 3:15) நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு … வேண்டிக்கொள்ளுகிறேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-SLz4dJAyQY
பொதுவாக நடக்கமுடியாத முடவர்களை சப்பாணிகள் என்று அழைப்பதுண்டு. ஆனால், சபையில் கால்களிருந்தும் சப்பாணிகளாய் இருக்கிற அநேக விசுவாசிகள் திரளாய் இருக்கிறார்கள். கைகளிருந்தும் ஜெபத்தில் கைகளை உயர்த்தி ஜெபிக்காதவர்கள், கால்களில் பெலனிருந்தும் முழங்கால் படியிட்டு ஜெபிக்காதவர்கள் சோம்பேறிகள் மாத்திரமல்ல, அவர்கள் சப்பாணிகள் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். பாரம்பரியக்கட்டுகளினாலும், பெருமையினாலும், கைகளை உயர்த்தி ஜெபிக்க அநேகருக்கு விருப்பமில்லை. இவர்கள் அனைவரும் தாவீதின் காலத்தில் எபூசியர் கோட்டையிலிருக்கும் சப்பாணிகளைப்போன்றவர்கள்.
ஒரு வயதான முதியவர் சபைக்குள் வந்ததிலிருந்து ஆராதனை நேரம் முழுவதுமாக நெடுமுழங்காலில் நின்று ஆராதித்துக்கொண்டிருந்தார். ஒரு மூதாட்டிக்கு சுமார் 80 வயது ஆனாலும், தன்னால் முன் போல் முழங்கால் படியிட்டு ஜெபிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவர்களுக்குள்ளாக இருந்தது. இப்படிப்பட்டவர்கள் நடுவில், பலர் நல்ல பெலனிருந்தும் முழங்கால் படியிடாமலும், கரங்களை உயர்த்தி ஜெபிக்காமலும், கைதட்டி ஆராதிக்காமலும் இருக்கிறதை இந்நாட்களில் பார்க்க முடிகிறது. விருந்து சாப்பாடு சாப்பிடும்போது, இலைக்கு முன்பாக சமணங்கால் போட்டு சாப்பிடுவதை போன்ற நிலை தான் இன்றைக்கு பலருக்கு தங்கள் ஜெபநேரத்திலிருக்கும் நிலையாகி போய்விட்டது.
ஒரு சபையில் பாடல் பாடுவோர்கள், இசை கருவிகளை வாசிப்பவர்கள் போன்றோரை காட்டிலும், ஜெபிப்பவர்கள் அதிகமாய் இருந்தால் மாத்திரமே சபை வளரும். உப்பு போடாத சாப்பாடு சுவையாக இருக்காது. பருப்பு இல்லாமல் சாம்பார் இல்லை. அதுபோல ஜெபம் இல்லாத சபை ஒருநாளும் சுவையாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்க முடியாது.
ஆகையால் சபையில் ஜெபங்களை கூட்டுங்கள்; ஜெபிப்பதற்கு அநேகரை உற்சாகப்படுத்துங்கள். ஒரு நாட்டின் இராணுவத்திற்கு எப்படி விமானப்படை முக்கியமோ, அதுபோல ஜெபிக்கும் படை சபைக்கு அதிகமாக முக்கியம். ஜெபமில்லாத சப்பணிகளாய் இல்லாமல், ஜெபிக்கும் ஜெப வீரர்களை மாறுவோம்; சபையின் வளர்ச்சிக்கு அயராது உழைப்போம், அப்பொழுது நாம் எதிர்பார்க்கும் எழுப்புதலை நம் கண்கள் காணும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org