நமக்கு தரிசன பார்வை வேண்டும் (We need vision).

I சாமுவேல் 3:21 கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/V-9mV_h0EOU

கோழி குஞ்சுகளை திருடி செல்லும் பருந்தானது செய்யும் முதலாவது வேலை, அந்த குஞ்சின் கண்களை கொத்தி குருடாக்கிவிடுமாம். காரணம், தன் கால்களின் பிடியில் அகப்பட்ட குஞ்சு தடுமாறி கீழே விழுந்தால் தாய் கோழியிடம் சென்று விடக்கூடாது என்பதால் அப்படி செய்யும். அதுபோல தான் இந்நாட்களில் சத்துரு செய்கிற காரியம் தேவ ஜனங்கள் தரிசனமில்லாத கண்கள் உடையவர்களாய் இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிறான். சிம்சோனை பிடித்த பெலிஸ்தியர்கள் முதலாவது அவனுடைய கண்களை குருடாக்கினார்கள், பின்பு தான் அவனை சிறைச்சாலையில் அடைத்தார்கள். சிதேக்கியா ராஜாவை பிடித்த நேபுகாத்நேச்சார் முதலாவது செய்தது அவன் கண்களை குருடாக்கினான். சத்துரு நம்முடைய கண்களை தரிசனமில்லாத கண்களாய் மாற்றிவிட ஒருநாளும் நாம் அவனுக்கு அனுமதி கொடுக்க கூடாது.

இயேசு ஒரு பண்டிகை நாளில் எருசலேமை நோக்கி கடந்து சென்றார். தூரத்திலிருந்து எருசலேமை நோக்கி பார்த்தார். அவர் இருந்த இடத்திலிருந்து எருசலேமை பார்க்கும் போது எல்லாருடைய கண்களுக்கும் எருசலேம் மிகவும் அழகாக இருந்தது. குற்றால அருவியை பார்க்கும்போது , அங்கே இருந்து வரும் நீர்வீழ்ச்சி புத்துணர்ச்சியாக இருக்கும். ஊட்டி மலையில் இருக்கும் மலர்கள், நம்முடைய கண்களை கவர்ச்சிக்கிறதாய் இருக்கும். கொடைக்கானல் மலையில் இருக்கும் பைன் மரக்காடுகளை (Pine forest) பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும். இதுபோல மிகப்பெரிய தேவாலயம், நேர்த்தியாக கட்டப்பட்ட பட்டணம், இயற்கை எழில் மிகுந்த பட்டணமாகிய எருசலேமை இயேசு பார்த்தார். ஆனால் இயேசுவுக்கு இவையனைத்தும் வியப்பாக இல்லை. காரணம் அவர் தீர்க்கதரிசன கண்களை உடையவராக இருந்தார். எருசலேமை பார்த்து சொன்னார் எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று (மத் 23:37) என்பதாக.

இப்படிப்பட்ட தரிசனமுள்ள கண்கள் நம் அனைவருக்கும் வேண்டும். தேசத்தை குறித்த தரிசனம், சபையை குறித்த தரிசனம், பட்டணத்தை குறித்த தரிசனம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். தரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள். ஜனங்கள் சந்துருவின் பிடியிலிருந்து மீட்கப்பட தரிசனப்பார்வை வேண்டும். மிஷனரி ஸ்தலத்தில் பணிபுரிபவர்களை ஜெபத்தாலும் காணிக்கைகளாலும் தாங்க தரிசன பார்வை வேண்டும்.தேசமெங்கும் சபை கட்டப்பட தரிசன பார்வை வேண்டும். ஊழியக்காரர்களை உருவாக்கும் தரிசன பார்வை வேண்டும். தரிசனம் இல்லாதவர்கள் செல்லாத காசுக்கு சமமானவர்கள் என்று ஒரு ஊழியக்காரர் சொன்னார். தரிசனம் இல்லாத ஏலி, ஓப்னி, பினகாசை போலில்லாமல், தரிசனப்பார்வையுள்ள, ஆபிரகாம் சாமுவேலை போல நாம் ஒவ்வொருவரும் காணப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் தரிசன பார்வை வேண்டும் என்று மன்றாடுவோம். அவர் தரிசனத்தை கொடுப்பதோடு நின்றுவிடாமல், கொடுத்த தரிசனத்தை அவரே நிறைவேற்றவும் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *