யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான். அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார் (1 நாளாகமம் 4:10)
ஆசீர்வாதம் என்ற வார்த்தையை விரும்பாதவர்கள் ஒருவரும் இருப்பதில்லை. நம்முடைய தேவனும் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். தேவன் தம்முடைய சாயலாகவே மனுஷனைச் சிருஷ்டித்து, ஆணும் பெண்ணுமாக உருவாக்கி, அவர்களை ஆசீர்வதித்தார் என்று ஆதி. 1:27,28-ல் வாசிக்கிறோம். உங்கள் தனிப்பட்ட ஜீவியம், குடும்பவாழ்க்கை, வேலைகள், தொழில்கள், கர்த்தருடைய ஊழியங்கள் எல்லாம் ஆசீர்வாதமாய் காணப்படவேண்டும் என்பது அவருடைய பிரியம். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் (ஆவி, ஆத்துமா, சரீரம்) வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்று 3 யோவான் 1:2 – ல் வாசிக்கிறோம். இயேசு தன்னுடைய சீஷர்களை பெத்தானியா வரைக்கும் அழைத்துகொண்டு சென்று அவர்களை ஆசீர்வதிக்கையில் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று லூக்கா 24:50-ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆசாரியர்களை, ஊழியர்களை, ஜனங்களை ஆசிர்வதிக்கும்படியாகவே கர்த்தர் நியமித்தார். அவர்கள் ஜனங்களை மனப்பூர்வமாய் ஆசிர்வதிக்கும்போது, கர்த்தராகிய நான் அவர்களை ஆசிர்வதிப்பேன் என்பது அவருடைய வாக்குத்தத்தம்(எண். 6:23-27). நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக்கோபு 1:17).
யாபேஸின் தாய் அவனை துக்கத்தோடு பெற்றதால் அவனுக்கு துக்கத்தின் மகன் என்று அர்த்தம் கொள்ளும் யாபேஸ் என்ற பெயரை வைத்தாள். ஆகையால் கனவீனப்படுத்தப்பட்ட, அவமானத்திற்குள்ளான, ஒதுக்கப்பட்ட ஒரு பாத்திரமாய் அவன் காணப்பட்டான். ஒருநாள் ஆண்டவரை நோக்கி, என்னை ஆசீர்வதியும் என்று வேண்டினான். கர்த்தர் அப்படியே அவனை ஆசீர்வதித்தார். ஆகையால் தன் சகோதரருக்குள்ளே கனத்திற்குரியவனாய் அவன் மாறினான். கர்த்தருடைய பிள்ளைகளே, தேவன் உங்களை கனவீனத்திலிருந்து கனத்திற்குரிய பாத்திரமாய் மாற்றுகிறவர். உங்கள் நிந்தைகளை புரட்டிபோடுகிறவர். உங்கள் மாரா போன்ற கசந்த நிலைமைகளை மதுரமாக மாற்றுகிறவர். உங்கள் சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றுகிறவர்.
புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவமானப்படுத்தப்பட்டவர்களாய், துக்கங்களால் நிறைந்து காணப்படுகிறீர்களோ, யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கினதுபோல, உங்கள் கண்கள் சிலுவையில் உயர்த்தப்பட்ட ஆண்டவரை நோக்கிப்பார்க்கட்டும். அப்பொழுது உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். உங்கள் வெட்கத்திற்கு பதிலாக இரண்டத்தனையான பலன் வரும்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்கள் எல்லைகள் பெரிதாகும். உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு, உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும், தடைசெய்யாதே, உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய் (ஏசாயா 54:2-3) என்பது கர்த்தருடைய வார்த்தை. ஆபிரகாம் ஒருவனாயிருக்கையில் அவனை அழைத்து, ஆசீர்வதித்து, அவனை பெருகப்பண்ணினவர் உங்களையும் பெருகப்பண்ணுவார். அவருடைய வல்லமையின் கரம் உங்களோடுகூட இருந்து, தீங்கு செய்கிறவனாகிய பொல்லாத சத்துருவின் கைக்கு உங்களை விலக்கி தப்புவிக்கும். யாபேஸ் ஆசீர்வதிக்கப்பட்ட பின்பு அவனுடைய சகோதரர்கள் அவனைத்தேடி வந்தது போல, உங்களை புறக்கணித்த, அற்பமாய் எண்ணினவர்கள் அத்தனை பேரும் உங்களைத்தேடி வரும்படி கர்த்தர் செய்வார். நீங்கள் அனேகருக்கு ஆசீர்வாதாயிருப்பீர்கள்.
யாபேஸ் வேண்டிக்கொண்டதை அவனுக்கு அருளின தேவன், நீங்கள் வேண்டிக்கொள்ளுகிற எல்லாவற்றையும் உங்களுக்கு தந்தருளி உங்களை கனம்பண்ணுவாராக.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org