தேமாவின் உலக ஆசை(Demas loves the things of this life)

ஏனென்றால்,     தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து,     என்னைவிட்டுப் பிரிந்து,     தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்,     கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும்,     தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள்(2 தீமோத்.4:10).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/G0Y7WfHInmQ

அப்போஸ்தலனாகிய பவுலின் உடன் ஊழியனாய் காணப்பட்டவர் தேமா(பில.1:24). பர்னபா,     சீலா,     மாற்கு,     லூக்கா,     தீமோத்தேயு,     தீத்து,     எ;பபாப்பிரா போல பவுலோடு சேர்ந்து கர்த்தருடைய கனமான ஊழியத்தைச் செய்தவர் இவர். குறிப்பாக பவுல் ரோமச் சிறைச்சாலையில் காணப்பட்ட  நாட்களில் அவனுக்கு மிகவும் உதவியாய் உடனிருந்தவர்.  நாட்கள் கடந்து சென்ற போது,     உலக ஆசை அவரைப் பிடிக்கிறதாய் காணப்பட்டது. ஆகையால் சிரச்சேதம் பண்ணப்பட,     பவுலுக்கு தீர்ப்பு எழுதப்பட்ட வேளையில்,     அந்தக் கடினமான சூழ்நிலையில் அவரோடு காணப்படுவதற்குப் பதிலாக,     அவரை விட்டு விலகி தெசலோனிக்கேயாவிற்குச் செல்லுகிறவனாய் காணப்பட்டான். சத்துரு இப்பிரபஞ்சத்தின் ஆசையை அவனுக்குள் விதைத்த வேளையில்,     அவனுடைய கண்ணியில் விழுந்து போனான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்ட விதையைப் போல,     பவுலின் பிரசங்கத்தைக் கேட்கிறவனாயிருந்தும்,     உடன் ஊழியம் செய்தும்,     உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் அவனை நெருக்கினதினால் பிரயோஜமில்லாதவனாய்  போனான். அவன் அதற்கு முன்பு பவுலோடு சேர்ந்து கர்த்தருக்கு என்று செய்த ஊழியமும் வீணாய் போனது.  கேயாசி,     எலிசாவின் மேலிருந்த அபிஷேகத்தை நான்கு மடங்கு பெற்று வல்லமையாய் ஊழியம் செய்ய வேண்டியவன். நாகமானின்  பொருட்களின் மேல் இச்சை வந்ததினால் ஊழியத்தை இழந்து,     சாபத்தைச் சம்பாதித்தான்.  யூதாசும் பிசாசுக்கு  இடங்கொடுத்து பணத்தின் மேல் ஆசை வைத்து முப்பது வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்து அப்போஸ்தல பட்டத்தை இழந்து நான்று கொண்டு மரித்தான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     சத்துரு உலகக் கவலையையும்,     ஐசுவரியத்தின் மயக்கத்தையும் விதைத்துக் கொண்டே காணப்படுவான். இயேசுவைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை,     அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய்,     உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும்   காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து,     என்னைப் பணிந்துகொண்டால்,     இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். இயேசு: அப்பாலே போ சாத்தானே என்று அவனைக் கடிந்து கொண்டு  ஜெயத்தைச் சுதந்தரித்தார். உலகத்திலும்  உலகத்திலுள்ளவைகளிலும்  அன்புகூராதிருங்கள்,     ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில்,     மாமிசத்தின்  இச்சையும்,     கண்களின் இச்சையும்,     ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல,     அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்  என்று வேதம் எச்சரிக்கிறது. ஆஸ்தி,     ஐசுவரியங்கள் திரளாய் காணப்பட்டாலும் அது நமக்கு நித்திய ஜீவனைத் தராது. ஆகையால் உலகத்தின் காரியங்கள் மேல் ஆசை வைத்து,     உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற தேவதிட்டத்தை இழந்து விடாதிருங்கள். அனேக விசுவாசிகள் இந்நாட்களில் தேவனுக்கும் அவர் ஊழியத்திற்கும் பிரயோஜனமில்லாதவர்களாய் காணப்படுகிறார்கள். பவுல்  ஒநேசிமுவைக் குறித்து   பிலமோனுக்கு கடிதம் எழுதின வேளையில்,     முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன்,     இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன் என்று எழுதினான். நாம் தேமாவைப் போலப் பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து கர்த்தரையும் அவர் ஊழியத்தையும் விட்டு விலகிச்செல்லுகிறவர்களாய் அல்ல,     கர்த்தருக்கும் அவர் ஊழியத்திற்கும் பிரயோஜனம் உள்ளவர்களாய் காணப்படக் கர்த்தர் கிருபை செய்வாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *