இயேசு நல்ல ரசத்தை தருவார் (Jesus will give good wine).

யோவா 2:10. எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/B9Mw_r00mAU

வேதாகமத்தில் அநேக இடங்களில் திராட்சைரசம் என்பது திராட்சைப்பழத்தை பிழிந்தால் வரும் ரசத்தை குறிக்கிறது. மது அல்லது மதுபானம் என்பது சாராயத்தை குறிக்கிறதாய் காணப்படுகிறது. முதன்முதலில் தேவன் தான் ஆதாம் ஏவாளின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தினார். இன்று தலைமை விருந்தினர்களாக அரசியல் தலைவர்களையும், சினிமா நட்சத்திரங்களையும், பணம் படைத்தவர்களை அழைக்கும் விசுவாசிகள், ஆண்டவரை தலைமையாக வைத்து திருமணத்தை நடத்த தவறுவதை காணமுடிகிறது. இப்படி திருமணத்தை கனப்படுத்துகிற நம் ஆண்டவர், கானாவூர் என்னும் ஊரில் முதன் முதலாக அற்புதத்தை செய்ததார். அந்த திருமண விழாவில் திராட்சைரசம் குறைவுபட்டுபோனது. திருமண விழாவில் சாப்பாடு குறைவுபட்டால், சாப்பாடு சுவை இல்லாமல் இருந்தால், அதை குறித்து அநேகர் தவறாக பேசுவதை இந்நாட்களில் காண முடியும்.

திருமணத்தில் சாப்பாட்டில் குறை இருக்குமென்றால், அதை நடத்துபவர்களுக்கு அவமானம் வரும், மற்றவர்களுடைய பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள், இரு வீட்டார்களுக்கும் நடுவில் சண்டைகளும் சச்சரவுகளும் வரும். இப்படிப்பட்ட அவமானம், பழிச்சொல்லின் நடுவில் ஓருவேளை நீங்கள் காணப்படலாம். பற்றாக்குறைகளும், செலவழிந்துபோன திராட்சைரசம் போன்ற சூழ்நிலையிலும் நீங்கள் காணப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு பழைய ரசத்தின் சுவையை காட்டிலும், அதிக சுவையுள்ள புது ரசத்தை கொடுத்து மகிழ்ச்சி நிறைந்த திருமணமாக மாற்றினார்.

உங்கள் வாழ்க்கையிலும் அதிக சுவையுள்ள நல்ல ரசத்தை, அதாவது, சுவையுள்ள புது வேலையை, சுவையுள்ள நல்ல குழந்தையை, சுவையுள்ள சரீர நன்மைகளை கொடுத்து உங்களை மகிழ்விக்க இயேசு போதுமானவராக இருக்கிறார். முதலில் சாப்பிட்டவர்கள் சுவை குறைந்த ரசத்தை குடித்தார்கள். கடைசியில் சாப்பிட்டவர்கள் சுவை மிக்க ரசத்தை குடித்தார்கள். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் பெலனடைவார்கள். திராட்சத்தோட்டத்திற்கு வேலைக்கு வந்தவர்கள் அதிகாலையில் சிலர் வேலைக்கு வந்தார்கள், மத்தியானத்தில் சிலர் வேலைக்கு வந்தார்கள், மாலையில் சிலர் வேலைக்கு வந்தார்கள். தோட்டத்தின் எஜமான் கடைசியில் வேலைக்கு வந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்தான். தாமதமாக வேலை கிடைத்தவர்களுக்கு, கர்த்தர் அதை மகிழ்ச்சியாகவும் சுவையாகவும் மாற்றினார். அதுபோல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் எந்தவிதமான நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் கர்த்தர் மிகவும் சுவையுள்ளதாக, நல்லதாக கொடுப்பார். பற்றாக்குறைகள் இருக்கும் சூழ்நிலைகளில் இயேசுவின் கரத்திலிருந்து புது ரசத்தை எதிர்பாருங்கள். சுவையுள்ள அனுபவத்திற்கு நேராக கர்த்தர் உங்களை நடத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *