பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள் (சங். 2:11)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/BTPEEjT7U8M
கர்த்தருடைய சமூகம் மனமகிழ்ச்சியின் இடமாய் காணப்படுகிறது. கர்த்தர் நம்மைத் தம்முடைய ஜெபவீட்டில் அழைத்துக் கொண்டு வந்து மகிழப்பண்ணுகிறார். ஒரு வாரம் முழுவதும் கடினமாய் உழைத்து, உடல் மற்றும் மனச்சோர்வோடு ஆலயத்தில் நாம் கூடிவரும் போது, அவருடைய பிரசன்னம் நம்மை நிரப்புகிறது, அவர் நம்முடைய பாரங்கள் கவலைகள் எல்லாவற்றையும் எடுத்து விட்டு நம்மை களிகூரச் செய்கிறார். கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள், துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம் என்று வேதம் கூறுகிறது. பாடல்களைப் பாடி கர்த்தரைத் துதித்து ஆராதிக்கும் போது அவருடைய பிரசன்னத்தினாலும் சந்தோஷத்தினாலும் நிரப்பி மகிழப் பண்ணுகிறார். ஆனால் மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது, நாம் கர்த்தருடைய சமூகத்தில் களிகூர்ந்தால் கூட, நடுக்கத்தோடு களிகூர வேண்டும் என்பதாக. பொதுவாக நடுக்கம் எப்போது நமக்கு வரும், பயமும் வியாகுலங்களும் நமக்குள் காணப்படும் போது கை, கால்கள் நடுங்கத் துவங்கிவிடும். கர்த்தரும் அவரைக் குறித்த பயபக்தியோடு நாம் களிகூர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
இந்நாட்களில் கர்த்தரைக் குறித்த பயமும் பக்தியும் எங்கும் குறைந்து காணப்படுகிறது. யாக்கோபு தேவனைக் குறித்துக் கூறும் போது என் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர் என்று கூறினான். கர்த்தருடைய பிள்ளைகளே, பயத்தோடு கர்த்தரைச் சேவியுங்கள். நடுக்கத்தோடு அவர் சமூகத்தில் களிகூருங்கள். ஒரு அரசனின் குடிமக்கள் எப்படி தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்த, தேசிய தினங்களிலும், பண்டிகை நாட்களிலும் அவரை முந்தஞ்செய்வார்களோ, அதுபோல குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும் படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள் (சங். 2:12). நம்முடைய தேவன் துதிகளில் பயப்படத் தக்கவர், பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர். நாம் சந்தோஷப்பட்டு களிகூரும் போதும் கூட நம்முடைய இருதயங்களில் தேவனைக் குறித்த பயம் காணப்பட வேண்டும். சபைகளில் பயபக்தியோடு கர்த்தரைச் சேவிக்காததின் நிமித்தம் தேவப் பிரசன்னத்தை இந்நாட்களில் உணரமுடியவில்லை. ஆலயம் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும், மின்னணு சாதனங்கள் எங்கும் பொருத்தப்பட்டிருக்கும், ஊழியர்களுடைய கரங்களிலும் அப்படிப்பட்ட சாதனங்கள் காணப்படும், அவைகளைப் பயன்படுத்தி ஊழியம் செய்வது அவர்களுக்கு புதுப்பாங்காகி விட்டது, அவர்களைப் பின்பற்றுகிற விசுவாசிகளும் அப்படியே செய்கிறார்கள். ஆகையால் வேதாகமம் அச்சிடப்படுவது வெகுவாகக் குறைந்து விட்டது. வருகிற நாட்களில் வேதாகமம் அச்சிடப்படுகிற கட்டிடங்களையும் கூட புறஜாதிகள் வாங்கி தங்களுடைய வழிபாட்டுத்தலங்களாகவும், உணவகங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றப்போகிறார்கள். தேவ ஜனமே, உங்களுக்குள் கர்த்தரைக் குறித்த பயமும் நடுக்கமும் எப்பொழுதும் காணப்படட்டும். நீங்கள் பயபக்தியோடு அவரை அண்டிக்கொள்ளும் போது பாக்கியவான்களாய், பாக்கியவதிகளாய் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae