உமது பிரமாணம் எனது கீதம் (Your statutes are my songs).

நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின (சங். 119:54).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YgjO_gbqPDo

கர்த்தருடைய வார்த்தைகள் நம்முடைய பாடல்களாய் காணப்பட வேண்டும். உலகக் கவிஞர்கள் இயற்கையைப் பார்க்கும் போதும்,      சிருஷ்டிகளின் அழகைப் பார்க்கும் போதும்,      சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் பாடல்களை எழுதுவார்கள். அந்த பாடல் தாலந்துகள்  இயற்கையாகவே அவர்களுக்குள் இருப்பதினால் அவர்கள் அவ்வாறு எழுதுகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அவருடைய பிரமாணங்கள்   கீதங்களாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். நூற்றுப் பத்தொன்பதாவது சங்கீதத்தை எஸ்றா  எழுதியிருக்கக் கூடும் என்றும்,      சங்கீதக்காரனாகிய தாவீது  எழுதியிருக்கக் கூடும் என்றும் பலவிதமான கருத்துகள் காணப்படுகிறது. இந்த சங்கீதத்தின் தலைப்பில் யார் எழுதினது என்பது எழுதப்படவில்லை,       யார் எழுதினது என்பதைக் கர்த்தருடைய ஆவியானவர் வெளிப்படுத்தவும் இல்லை. ஆனால் இந்த வசனத்தைப் பார்க்கும் போது ஒருவேளை தாவீது எழுதியிருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. மேன்மையாய் உயர்த்தப்பட்டு,      யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று,      இஸ்ரவேலின்  சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய  தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்,      கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்,      அவருடைய வசனம் என் நாவிலிருந்தது என்று தாவீது தன்னைக் குறித்து 2 சாமுவேல் 23:1,     2ல் கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது. அவருடைய நாவில் காணப்பட்ட கர்த்தருடைய வசனம் கர்த்தரைக் குறித்த இன்பமான பாடல்களைப் பாடச் செய்திருக்கக் கூடும்.

பரதேசியாய் தங்கும் வீட்டில் கர்த்தருடைய பாடல்களை அவன் பாடியிருக்கிறான். பரதேசி என்பதற்குப் பயணி என்பது பொருள். ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்குப் பிரயாணம் செய்கிறவன். ஆபிரகாம் கூட பரதேசியைப் போல வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்ந்தான் என்று வேதம் கூறுகிறது,      அவனுடைய கண்கள் புதிய எருசலேம் என்னும் நகரத்தின் மேல் காணப்பட்டது. தாவீது  ராஜாவாக மாளிகையில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் பரதேசி என்ற உணர்வோடு வாழ்ந்தான்.  கர்த்தருடைய பிள்ளைகளே,      நாமும் இந்த பூமியில் பரதேசிகளாய் காணப்படுகிறோம். நம்முடைய நிரந்தர குடியிருப்பு பரலோகத்தில் காணப்படுகிறது. நாம் இந்த பூமியிலிருந்து,      அஸ்திபாரமுள்ளதும்,      அசைவில்லாததுமான மேலான தேசமாகிய பரலோகத்திற்கு நேராக யாத்திரைச் செய்கிறவர்களாய் காணப்படுகிறோம். ஆகையால் இந்த பூமியில் கர்த்தருடைய பிரமாணங்களைப் பாடல்களாய் பாடி மகிழுங்கள். கர்த்தருடைய வார்த்தைகளை நீங்கள் பாடலாகப் பாடும் போது,      அது உங்களை மகிழப் பண்ணும்,      உங்களைத் தேற்றும். நீதிமான் பாடி மகிழுகிறான் என்றும்,      அவன் சரீரமாகிய கூடாரத்திலும்,      தங்கியிருக்கிற வீடுகளிலும் இரட்சிப்பின் கெம்பீர சத்தமுண்டு என்று வேதம் கூறுகிறது. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் உபத்திரவங்கள் நடுவிலும் கர்த்தரைப் பாடி துதித்தார்கள். அப்போது அவர்கள் கட்டுகள் அவிழ்ந்தது,      விடுதலை உண்டானது. அதுபோல நீங்களும் கர்த்தருடைய பிரமாணங்களைக் கொண்ட பாடல்களைப் பாடி மகிழும் போது,      கர்த்தருடைய வார்த்தையில் காணப்படுகிற வல்லமை உங்களை விடுதலையாக்கும். உங்களைக் கொண்டு பலருடைய வாழ்க்கையில் காணப்படுகிற கட்டுகளை உடைத்து விடுதலையைக் கொடுக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *