மாம்சத்தின் இச்சை (Lust of the flesh).

சங் 78:18. தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/iJEpOMtJEdw

இந்த உலகத்தில் வாழும் தேவ ஜனங்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டிய அதிமுக்கியமான மூன்று இச்சைகளில் ஒன்று மாம்சத்தின் இச்சை. மாம்சத்தின் கிரியைகள் என்ன என்பதை கலா 5 :19-21 வசனத்தில் சுமார் 17 காரியங்கள் கூறப்பட்டிருக்கிறது. அவற்றில் முதல் நான்கு மாம்சத்தின் இச்சையை குறிக்கிறது. அவைகள் விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம் போன்றவைகள். மாம்சத்தின் இச்சையை உண்டு பண்ணுகிறவன் பொல்லாத பிசாசு, அந்த மாம்சீக இச்சையை அனுமதிப்பவர்கள் ஜனங்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சிலர் ஒரு வசனத்தை சொல்லி வேத வசனத்தை உண்மைக்கு புறம்பாக திருத்தி பேசுவதுண்டு. நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்றும் மாம்சீக இச்சைகளும் தேவன் கொடுக்கும் சோதனை என்றும் வேத வசனத்தை தவறாக போதிக்கின்ற ஜனங்கள் உண்டு. நம்முடைய தேவன் பொல்லாங்கினால் சோதிக்கிறவரல்ல என்று யாக்கோபு அப்போஸ்தலன் அழகாக கூறியிருக்கிறார். மாம்சீக இச்சைகளில் விழுந்து தேவன் மேல் வீண்பழி சொல்லுவது, தகாத காரியம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான் (யாக் 1:13,14) என்று வசனம் கூறுகிறது.

சோதனை என்பது வெளியிலிருந்து வருகிறது, இச்சை என்பது உள்ளிருந்து வருகிறது என்று ஒரு ஊழியக்காரர் சொன்னார். வெளியே இருந்து நமக்கு கொண்டு வரப்படுவது சோதனை. உள்ளிருந்து நம்மை சிக்க வைப்பது இச்சை. இந்த மாம்சீக இச்சைகளில் சிக்கி தவிக்கும் ஜனங்களாக நாம் காணப்படலாகாது. இந்த உலகத்தில் அதிகமாகவும், விரும்பி செய்கிற பாவமும் பாலியலுக்கடுத்த பாவம் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இப்படியாக உலகத்து ஜனங்கள் கறைபட்டுபோகும்படி பொல்லாத பிசாசு அதிவேகமாக செயலாற்றிக்கொண்டிருக்கிறான். இந்த இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும் என்பதை அறிந்து ஆத்தும மரணத்திற்கும் சரீர மரணத்திற்கும் தப்பித்துக்கொள்ளும்படி கர்த்தர் சொல்லுகிறார்.

மாம்சீக இச்சைகளுக்கு தப்பித்துக்கொள்ள முடியுமா என்று கேட்டால், அதுவும் நம் அழைப்பு என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நம்மை ஆண்டவர் பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் இச்சையடக்கத்தோடு நாம் வாழுவோம், அப்பொழுது பிசாசின் அஸ்திபாரம் நிர்மூலமாகும்படியான, தேவனுடைய அம்பாக நாம் இருப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *