பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார் (ஆதி. 1:26).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/La8ThkP8GUw
கர்த்தர் மனுஷனை அவருடைய சாயலில் ஏன் சிருஷ்டித்தார்? அவரைப் போல சகலவற்றின் மேலும் ஆளுகைச் செய்யும்படிக்கு என்பதைக் தேவ ஜனங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும், அத்துடன் பூமியனைத்தையும் ஆளுகைச் செய்யுங்கள் என்பது கர்த்தருடைய கட்டளை. தேவன் மனிதர்கள் மேல் ஆளுகைச் செய்வார், மனிதர்கள் அவருடைய மற்ற சிருஷ்டிகள் மேல் ஆளுகைச் செய்யவேண்டும் என்பது கர்த்தருடைய நோக்கம். நோவாவின் நாட்களில் வெள்ளத்தினால் உண்டான அழிவிற்கு பின்பும் உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும், பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன (ஆதி. 9:2) என்று கர்த்தர் கூறினார்.
ஆதாமும், ஏவாளும் ஆண்டவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படியாமல், சத்துருவின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்து பாவம் செய்த பின்பு, தேவன் அவர்களுக்குக் கொடுத்த ஆளுகையைச் சத்துருவுக்குக் கையளித்துவிட்டார்கள். அதன்பின்பு வேதனையும், பாடுகளும், வேர்வை சிந்தி உழைப்பதும், சாபங்களும், அடிமைத்தனமும் மனுகுலத்தைப் பிடித்துக் கொண்டது. ஆகையால்தான், இயேசு ஸ்திரீயின் வித்தாக இந்தப் பூமியில் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அவதரித்தார். மனிதன் இழந்து போன ஆளுகையை சத்துருவினடத்திலிருந்து மீண்டும் மீட்டுத் தருவதற்காக அவர் தன்னுடைய இரத்தத்தைச் சிலுவையில் சிந்தினார். டெட்டலஸ்டாய் எல்லாம் முடிந்தது என்று சொல்லி சிலுவையில் வெற்றி சிறந்தார். சத்துருவின் ஆளுகைக்கும் அதிகாரத்திற்கு ஒரு முடிவை உண்டாக்கினார். உயிர்தெழுந்த பின்பு, தன் சீஷர்களுக்கு தரிசனமாகி, வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரத்தை உங்களுக்குத் தருகிறேன், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றும் வாக்குக் கொடுத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, இப்பொழுது இயேசுவின் இரத்தத்தின் வல்லமையால் பாவத்தின் மேல் உங்களுக்கு ஆளுகை காணப்படுகிறது. சத்துருவின் சகல வல்லமைகள் மேல் ஆளுகைக் காணப்படுகிறது. சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார் என்று லூக்கா 9:2ல் எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் ராஜரீக ஆசாரியக் கூட்டமாய் காணப்படுகிறீர்கள் (1 பேதுரு 2:9). நீங்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவீர்கள் என்பது அதிக நிச்சயம் என்று வேதம் கூறுகிறது. ஸ்காட்லாந்து தேசத்தின் ராணியான மேரி என்பவள் ஜாண்நாக்ஸின் முழங்கால் ஜெபத்திற்குப் பயப்பட்டாள். ராணியின் மேல் ஆளுகையை ஊழியனுக்குக் கர்த்தர் கொடுத்தார். தேவ ஜனங்கள் எழும்பி ஆளுகைச் செய்கிற காலமாய் இந்நாட்கள் காணப்படுகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae