ஆதி 17:19. அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/9gd4L04FeZ0
ஆண்டவர் தாவீதுக்கு நிச்சயமான கிருபையை கொடுப்பேன் என்று சொன்னார். கர்த்தர் ஈசாக்கோடு நிச்சயமாய் இருந்தார் என்று வேதம் கூறுகிறது (ஆதி 26:28). தெபொராள் பாராக்கோடேகூடக் கேதேசுக்கு நிச்சயமாய் வருவேன் என்று கூறினாள் (நியா 4:9). பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்கு கர்த்தர் சொன்னார். நித்திய உடன்படிக்கையையும் கர்த்தர் செய்தார். அதுபோல தான் தேவன் ஆபிரகாமுக்கு நிச்சயமான ஆசீர்வாதத்தை கொடுப்பேன் என்று வாக்குத்தத்தம் செய்தார்.
ஆபிரகாம் பிள்ளைப்பேறு இல்லாதபோது, பிள்ளை இனிமேல் பிறக்க வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையில் இருந்தபோது, கர்த்தர் அவனை பார்த்து நிச்சயமான ஆசீர்வாதத்தை கூறினார். ஆண்டவர் ஒருமுறை கூறினாலே போதுமானது, அதை கட்டாயம் செய்து முடிப்பார். ஆனால் ஆபிரகாமுக்கு, அவர் மீண்டும் வந்து ஆதி 18:10ல் சொல்லுகிறார், ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார் என்பதாக. ஆண்டவர் ஒரு தரம் விளம்பினார் இரண்டு தரம் கேட்டிருக்கிறேன், வல்லமை கர்த்தருடையது. ஆபிரகாமுக்கு ஒன்றிற்கும் அதிகமாக வந்து நிச்சயமான ஆசீர்வாதத்தை வாக்குத்தத்தம் செய்தவர் உங்களுக்கும் சொல்லுகிறார் நிச்சயமான ஆசீர்வாதத்தை நான் கொடுப்பேன் என்பதாக.
அதேவேளையில், ஆபிரகாமை போல விட வேண்டிய காரியங்களை நாம் விட்டு ஆண்டவருக்கு பிரியமானவர்களாக இருக்க வேண்டும். மெசொப்பொத்தாமியா தேசத்திலே இருந்த ஆபிரகாம் தன் தேசத்தையும் இனத்தையும் விட்டு பிரிந்தான். மெசொப்பொத்தாமியா தேசத்தில் யூபிரிட்டஸ், டைகிரிஸ் போன்ற இரண்டு நதிகள் உண்டு. ஒரு நதியோரத்தில் இருக்கும் ஜனங்களே இலையுதிராதிருக்கிற மரத்தை போல இருப்பார்கள். ஆனால் ஆபிரகாம் இரண்டு நதிகள் உள்ள தேசத்தை விட்டு ஆண்டவர் சொல் கேட்டு கானான் தேசத்தை நோக்கி புறப்பட்டான். முதலில் ஆண்டவர் சொல் கேட்டு இரண்டு நதிகள் உள்ள தேசத்தை விட்டு ஆபிரகாம் பிரிந்ததினால், கானானில் ஆண்டவர் இரண்டு நதிகளை ஆபிரகாமுக்கு கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்தார். பாலும் தேனும் ஓடுகிற நதிகளிலுள்ள தேசத்தை ஆண்டவர் ஆபிரகாமுக்கு கொடுத்தார். ஆபிரகாமை போல உலகத்துக்குரிய காரியங்களை விட்டு நாம் பிரியவேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். தன் சொந்த பந்தத்தை விட்டு பிரிந்தான், தகப்பனாகிய தேராகை விட்டு பிரிந்தான். ஆண்டவருடைய இராஜ்யத்திற்காக விட வேண்டிய நட்புகள், தடையாக இருக்கிற உறவுகளையும் விட நாம் முன் வர வேண்டும். அதுபோல மற்றவர்களுடைய செல்வத்திற்கு ஆசைப்படாதவனாகவும் ஆபிரகாம் இருந்தான்.
இப்படி ஆபிரகாமின் சுபாவம் உங்களுக்குள்ளாக இருக்குமென்றால், ஆண்டவர் உங்களுக்கு நிச்சயமான ஆசீர்வாதத்தை கொடுப்பார். நீங்கள் நீண்ட நாள் காத்திருக்கிற காரியங்கள் கைகூடி வருவது நிச்சயம். இப்படி நிச்சயமான ஆசீர்வாதத்தை கொடுக்கிற ஆண்டவர் இன்று உங்களை பார்த்து சொல்கிறார் நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது என்பதாக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org