யாத் 18:25. மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/etAvw7JA0OU
மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க காலை முதல் சாயங்காலம் வரைக்கும் தன் நேரத்தை செலவிடுவதை பார்த்த தன் மாமனாகிய எத்திரோ, மோசேக்கு ஒரு ஆலோசனையை சொல்லுகிறான். மோசே மாமன் சொல்லுகிற நல்ல ஆலோசனைக்கு செவிகொடுக்கவும் அதின்படி செய்யவும் ஒப்புக்கொண்டான். ஒரு தலைமைத்துவ பணியில் இருக்கும் நபர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணாதிசயங்களை மோசேயின் மூலம் கற்றுக்கொள்ளலாம். அவன் சுயநலமாக, நான் செய்வது தான் சரி என்று பெருமைபிடித்தவனாக இல்லாமல், மற்றவர்களுடைய நல்ல ஆலோசனைக்கு செவிகொடுக்கிறவனாகவும், அதை செயல்படுத்துகிறவனாகவும், தன் வேலையை சரியான நபர்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறவனாகவும் காணப்பட்டான். இப்படிப்பட்ட பண்புகள் உலகப்பிரகாரமான வேலை ஸ்தலங்களிலும் நம் ஒவ்வொருவருக்கும் காணப்பட வேண்டும்.
மோசே தன்னுடைய ஊழியப்பாதையில் தலைவர்களை உருவாக்கினான். நாம் ஒவ்வொருவரும் சபையில் இருக்கும் ஆசாரியனுக்கு கீழே பணிபுரியும் தலைவர்களாக இருக்க வேண்டும். தலைவர்களாக இருக்க வேண்டிய தகுதியை மோசேயின் மாமன் கூறுகிறான். முதலாவது, தலைவர்கள் தேவனுக்கு பயந்தவர்களாய் காணப்பட வேண்டும். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள், மற்றெந்த காரியங்களுக்கும் பயப்படமாட்டார்கள். இரண்டாவதாக, தலைவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான் (லுக் 16:10) என்று வசனம் கூறுகிறது. எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான் (லுக் 19 :17). மூன்றாவதாக, பொருளாசையை வெறுக்கிறவர்களாய் தலைவர்கள் காணப்பட வேண்டும். இயேசு சொன்னார் பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார் (லுக் 12:15). தலைவர்கள் மண்ணுக்குரிய காரியங்களில் நாட்டம் இல்லாமல் விண்ணுக்குரிய காரியங்களில் நாட்டம் உள்ளவர்களாய் காணப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட மூன்று தலை சிறந்த குணாதிசயங்களை உடையவர்களே தலைவர்கள். புதிய ஏற்பாட்டில் விதவைகளை விசாரிக்கவில்லை என்ற முறுமுறுப்பு வந்தது. அப்பொழுது அப்போஸ்தலர்கள் இந்த பந்திவிசாரிப்புக்கென்று மற்ற தலைவர்களை நியமிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அவர்கள் பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிறவர்களாய் காணப்பட வேண்டும் (அப் 6:1-4). நாமும் எப்பொழுதும் பரிசுத்த ஆவியால் நிறைந்தவர்களாயும், நற்சாட்சி பெற்றவர்களாயும் காணப்படவேண்டும். இப்படிப்பட்டவர்களே தலைவர்கள். சபைகளில் ஆசாரியனுக்கு கீழே, அப்போஸ்தலர்களுக்கு கீழே இப்படிப்பட்ட தலைவர்களாய் இருக்க நீங்கள் ஒவ்வொருவரும் எழும்ப வேண்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org