இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம் (லேவி. 18:27, 28).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/in1uI0cR2EY
இஸ்ரவேல் ஜனங்கள் கானானுக்குள் பிரவேசிப்பதற்கு முன்பு கர்த்தர் அவர்களுக்கு பாலியல் ஒழுக்கக்கேடுகளைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கும் படிக்கு கற்றுக் கொடுக்கிறதை லேவியராகமம் 18ம் அதிகாரத்தில் வாசிக்க முடிகிறது. தேசத்தின் குடிகள் மாம்சீக பாவத்தை அதிகமாய் செய்யும் போது, தேசம் அதின் குடிகளைக் கக்கிப் போடுகிறது. அனேக வேளைகளில் இயற்கைச் சீற்றங்களைக் கர்த்தருடைய கோபாக்கினையாய் நாம் பார்ப்பதில்லை. சோதோம் கொமோராவின் மாம்சீகப் பாவம் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அதின் அழிவுக்குக் காரணமாயிற்று. நோவாவின் நாட்களில் ஜனங்களின் தகாத உறவுகள் வெள்ளத்தினால் பூமி அழிக்கப்படுவதற்குக் காரணமானது. இஸ்ரவேல் சபை சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணினதினால் சுமார் இருபத்திமூவாயிரம் பேர் மரித்துப் போனார்கள். மோசே சீனாய் மலையில் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்த வேளையில், அவன் வரத் தாமதமானதினால் தங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை உண்டாக்கும் படிக்கு இஸ்ரவேல் ஜனங்கள் ஆரோனை நெருக்கின வேளையில், அவன் பொன் கன்றுக் குட்டிகளை உருவாக்கினான். பின்பு ஜனங்கள் புசிக்கவும், குடிக்கவும், மாம்சீக பாவங்களில் ஈடுபடவும் துவங்கியதினால் மூவாயிரம் பேர் அன்றைய தினம் வெண்டுண்டு விழுந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. ஆக, தேசத்தின் குடிகளுடைய மாம்சீக பாவங்கள் அவர்களின் அழிவுக்குக் காரணமாகி விடுகிறது.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாட்கள் மாம்சீக பாவங்கள் பெருகிப் போன நாட்களாய் காணப்படுகிறது. கண்களின் இச்சைகளும், மாம்சத்தின் இச்சைகளும், ஜீவனத்தின் பெருமைகளும் எங்கும் காணப்படுகிறது. இழிவான இச்சை ரோகங்களில் ஜனங்கள் சிக்கி தவிக்கிறார்கள். டீன் ஏஜ் பிள்ளைகள், வாலிபர்கள், பெரியவர்கள் என்று எல்லாரும் பாவங்களைத் தண்ணீரைப் போலப் பருகுகிறவர்களாய் காணப்படுகிறார்கள். ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் அதற்குத் துணைநிற்கிறது. திருமண உறவுகளுக்கு வெளியே, ஒன்றாகக் கூடிவாழ்கின்ற இளைய தலைமுறைகள் பெருகிக்கொண்டு வருகிறார்கள். யாவருக்குள்ளும் கனமாய் காணப்படவேண்டிய விவாக மஞ்சம் அசுசிப்பட்டு காணப்படுகிறது. உண்மையும் உத்தமமும் புருஷன் மனைவிக்குள்ளாய் இல்லை. பள்ளிக் கல்லூரிகளில் ஒழுங்கீனங்கள் காணப்படுகிறது. கற்புள்ள கன்னிகையாய் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு நியமிக்கப்பட்ட , பரிசுத்தமாய் காணப்பட வேண்டிய மணவாட்டி சபைகளிலும் கூட மாம்சத்தின் கிரியைகளுக்கு இடம் கொடுத்து தங்களை விற்றுப் போட்ட யேசபேலின் கூட்டம் திரளாய் காணப்படுகிறது. ஆகையால் தான் தேசங்களில் பூமியதிர்ச்சிகளும், சுனாமிகளும், நிலச்சரிவுகளும், விபத்துகளும், யுத்தங்களும் பெருகி, திரளான ஜனங்களை வாரிக்கொள்ளுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தருடைய ஜனங்கள் இன்னும் பரிசுத்தமாய் ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள். சத்துருவினால் விதைக்கப்படும் பாவத்தின் கிரியைகளைத் தடைசெய்கிறவர்களாய் எழும்புங்கள். பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்று இயேசு கூறினார், சபைகள் பரிசுத்தத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும், அப்போது தேசம் தன் குடிகளை கக்கிக் போடுவதில்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae