லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரனாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு.. (எண். 16:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-OMOXBnt6bc
கர்த்தருடைய பணியைச் செய்யும் படிக்குத் தெரிந்து கொண்ட லேவி கோத்திரத்தைச் சேர்ந்த கோராகு என்பவன், ரூபன் வம்சத்தைச் சேர்ந்த தாத்தானையும் அபிராமையும் சேர்த்துக் கொண்டு, அவர்களோடு சபையில் பிரபலமான இருநூற்று ஐம்பது பேரையும் சேர்த்து ஒரு கூட்டத்தைக் கூட்டி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக எழும்பினான். அவர்கள் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள், ஆகையால் தான் கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறார், உங்கள் நிமித்தம் அல்ல, நீங்கள் ஏன் கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை உயர்த்துகிறீர்கள் என்று கேட்டார்கள். இதுவரை பத்து முறைக்கு மேல் கர்த்தரை பரீட்சை பார்த்த இஸ்ரவேல் சபைமக்கள் பரிசுத்தமானவர்கள் என்றும், அவர்களை அழிப்பதற்குக் கர்த்தர் எழும்பின வேளையில் அவர்களுக்காக முகங்குப்புற தரையில் விழுந்து, ஜெபித்து, இரக்கத்தைப் பெற்றுக் கொடுத்த மோசேயும் ஆரோனும் பெருமையுள்ளவர்கள் என்பதாகவும் குற்றஞ்சாட்டினார்கள். மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனும், கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனும் என்று கர்த்தரே அவனைக்குறித்து சாட்சி கொடுத்திருந்தும், ஜனங்கள் அவனை, தன்னை உயர்த்துகிறவனாகக் குற்றஞ்சாட்டினார்கள்.
இப்படிக் கூட்டத்தைச் சேர்த்து, பிரிவினைகளை உண்டாக்குகிற கோராகின் ஆவி இந்நாட்களில் சபைகளில் அதிகமாய் செயல்படுகிறது. கொஞ்சம் பிரபலமானவுடன் தங்களைப் பெரியவர்களாய் காட்டி, குடும்பக் கூடுகைகள், முக்கியமான நாட்களில் கூடுகைகள், பொழுது போக்கு பூங்காக்கள், கடற்கரைகள் என்றும் சிலரைக் கூட்டி பிரிவினைகளை உண்டாக்குகிற திரளான ஜனங்கள் சபைகளில் உண்டு. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் பிசாசுக்கு ஊழியம் செய்கிறோம் என்பதை அறியாதபடிக்கு காணப்படுகிறவர்கள். தங்களை ஒரு கூட்டம் முகஸ்துதி செய்ய வேண்டும், பெரியவர்களாய் கருத வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள். கர்த்தருடைய பிள்ளைகள் சபையில் காணப்படுகிற எல்லாரையும் ஒன்று போல நேசிக்க வேண்டும், பெரியவர்கள் சிறியவர்கள் என்ற வித்தியாசம் பார்க்காமல் நேசிக்க வேண்டும், எல்லோருக்கும் விருந்தோம்பல் செய்கிறவர்களாய் காணப்பட வேண்டும். சிறியவர்களுக்குச் செய்யும் போது அவர்கள் உங்களுக்குப் பதில் செய்வதில்லை, அதினிமித்தம் பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். இயேசு, மனிதர்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்தவர், மனிதர்கள் முகத்தைப் பார்ப்பார்கள், ஆனால் அவரோ இருதயத்தைப் பார்க்கிறவர். கோராகின் கூட்டம் இப்படி பிரிவினைகளை விதைத்தபடியால், கர்த்தர் புதிய காரியத்தை நேரிடச் செய்து, பூமி தன் வாயைப் பிளந்து அவர்கள் எல்லாரையும் ஒருமித்து விழுங்கிப் போடும் படிக்குச் செய்தார். கோராகு தனக்கும், தன் குடும்பத்திற்கும், தன் கூட்டத்திற்கும் சாபத்தைச் சம்பாதித்தான். கர்த்தருடைய பிள்ளைகள் நாம் சகோதரர்களாய் காணப்படுவதினால் ஒருமித்துக் காணப்படுவோம், அது நன்மையாயும் இன்பமாயும் காணப்படுகிறது, அப்போது கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் உங்களுக்குக் கட்டளையிடுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae