ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய், ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே (உபா. 16:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oVcNmjWxY2U
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி பிரயாணம் செய்யத் துவங்கும் முன், ஒரு நாள் கர்த்தர் மோசேயையும், ஆரோனையும் நோக்கி, இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம், இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக என்றார் என்பதை யாத்.12:1, 2ல் வாசிக்க முடிகிறது. அதுவரைக்கும் டிஸ்ரி என்ற மாதம் அவர்களுக்கு வருஷத்தின் முதல் மாதமாய் காணப்பட்டது. ஆனால் வருஷத்தின் ஏழாவது மாதமாய் காணப்பட்ட நிசான் என்ற மாதத்தை வருஷத்தின் முதல் மாதமாகக் கர்த்தர் மாற்றி, அதற்கு ஆபிப் என்ற பெயரையும் போட்டார். அதோடு இஸ்ரவேல் ஜனங்களை அன்று தான் முதன்முதலில் இஸ்ரவேல் சபையார் என்று கர்த்தர் அழைத்தார். ஆகையால் தான் இந்த புதிய நாட்காட்டியின் துவக்கமானது அவர்களது யூதமதத்தைச் சார்ந்ததாய் காணப்பட்டது. தேவன் அந்த ஆபிப் மாதத்தைக் கவனிக்குப்படிக்குக் கூறுகிறார். ஏன் அப்படிக் கூறினார் என்றால், அந்த மாதத்தில் தான் கர்த்தர் அவர்களுக்கு பஸ்கா என்ற நியமத்தைக் கொடுத்து, வீட்டுக்கொரு ஆட்டுக்குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை எடுத்து வீட்டின் நிலைக்கால்களிலும், மேற்சட்டத்திலும் பூசி, அன்று ராத்திரி அவர்களை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார். பார்வோனுடைய கரங்களிலிருந்து விடுபட்டு, எகிப்தை விட்டுப் புறப்படுதலை நினைவுகூரும் படிக்கு, புதிய மாதத்தைக் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையில் புதிய துவக்கத்தைக் கர்த்தர் கொடுத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, சிலுவைதான் கர்த்தருடைய பிள்ளைகளுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் துவக்கமாய் காணப்படுகிறது. சிலுவையில் நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காய் அடிக்கப்பட்டிருக்கிறார். சிலுவையில் இயேசு சிந்தின இரத்தம்தான் நம்முடைய பாவங்களைக் கழுவி நம்மை இரட்சித்தது. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை. இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம் சபையைக் கிரயத்திற்குக் கொண்டார். சிலுவை நம்முடைய மீட்பின் சின்னம். ஆகையால் சிலுவைதான் நமக்கு எல்லாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் போது, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் என்று எழுதினார். சபைகள் சிலுவையில் அறையுண்ட இயேசுவை அறிய வேண்டும். மீட்பின் மேன்மையை உணர வேண்டும். கிறிஸ்தவ ஜீவியத்தில் இரண்டு பகுதிகள் காணப்படுகிறது. ஒன்று கிறிஸ்தவனாய் காணப்பட்டிருந்தும் சிலுவை வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் காணப்படுகிற நாட்கள், மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும், சுயத்தையும் சிலுவையில் அறையாமல் வாழுகிற ஒரு வாழ்க்கை. இன்னொன்று சிலுவை நம்வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, அப்போஸ்தலனாகிய பவுலைப் போல இயேசுவின் காயத்தின் தழும்புகளைச் சரீரத்தில் தரித்து, இயேசுவோடு சிலுவையில் அறையுண்டவன் என்ற உணர்வோடு வாழும் ஒரு புதிய வாழ்க்கை. பஸ்கா ஆட்க்குட்டியாய் சிலுவையில் இயேசு உங்களுக்காக அடிக்கப்பட்டதைக் கவனித்து அனுதினமும் வாழுங்கள். அதுவே இயேசுவுக்குப் பிரியமான வாழ்க்கையாய் காணப்படுகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae