ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய் (உபா. 28:12).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8nWNRwdH-gY
இந்த பூமியில் காணப்படுகிற ஒவ்வொரு அரசாங்கத்திற்கும், நிறுவனங்களுக்கும் கருவூலம் அல்லது கஜானா காணப்படும். அங்கே அவர்களது நிதி மற்றும் செல்வங்களைச் சேர்த்து வைப்பார்கள். தேவாதி தேவனுக்கும் ஒரு பொக்கிஷசாலை காணப்படுகிறது. அது நன்மைகளினாலும், ஆசீர்வாதங்களினாலும், ஐசுவரியத்தினாலும் நிறைந்த பரலோக பொக்கிஷசாலை. இந்த பூமியில் காணப்படுகிற எல்லாப் பொக்கிஷசாலைகளும் காலியாகிப் போனாலும், கடன் வாங்குகிறவர்களாய் மாறினாலும், பரலோக பொக்கிஷசாலையில் ஒருநாளும் ஒரு குறைச்சலும் காணப்படுவதில்லை. அது எப்போதும் நிறைந்து, நிறைவாகவே காணப்படும். அதிலிருந்து கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கக் கொடுக்க, அது மீண்டும், மீண்டும் நிறைந்து, பொங்கி வழிந்து கொண்டு காணப்படும்.
எப்போது பரலோக பொக்கிஷசாலை உங்களுக்காய் திறக்கும்? மோசே மரிப்பதற்கு முன்பு, இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைத்தார். உபாகமம் 28:1ன் படி, கர்த்தருடைய கட்டளைகளின் படியெல்லாம் நீங்கள் செய்யக் கவனமாயிருக்கும் போதும், அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுக்கும் போதும், ஆசீர்வாதம் என்னும் பொக்கிஷசாலை உங்களுக்காய் திறப்பேன் என்று வாக்குக் கொடுத்தார். நீங்கள் கர்த்தருடைய வசனத்தின்படி வாழும்போதும், மேய்ப்பனுடைய சத்தத்தை அறியும்போதும் உங்களுக்கு ஆசீர்வாதம் என்னும் நல்ல பொக்கிஷசாலையைக் கர்த்தர் திறப்பார். அதுபோல, என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள், அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதனால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்றும் மல்கியா 3:10ல் கர்த்தர் கூறினார். கர்த்தருடைய பணிக்கென்று நீங்கள் விதைக்கும் போது, வானத்தின் பலகணிகளாகிய பரலோக பொக்கிஷசாலை உங்களுக்காய் திறக்கும், கர்த்தர் உங்களை இடம்கொள்ளாமல் போகும்மட்டும் ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் பரலோக பொக்கிஷசாலையை உங்களுக்காகத் திறக்கும் போது, ஏற்ற காலத்தில் உங்கள் தேசத்தில் மழை பெய்யும், நீங்கள் கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வாதமாய் காணப்படும். தேவன் யாக்கோபோடு இருந்தார், அவன் லாபானிடத்தில் போய் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன், அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும் என்றான், அதற்கு லாபானும் ஒத்துக் கொண்டான். அதன்பின்பு ஆடுகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது. இவ்விதமாய் யாக்கோபு மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனாகும் படிக்குக் கர்த்தர் கிருபை பாராட்டினார். கர்த்தருடைய பொக்கிஷசாலை உங்களுக்காய் திறக்கப்படும் போது நீங்களும் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நீங்கள் விருத்தியடைந்து பெருகுவீர்கள். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது, அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை என்று வேதம் கூறுகிறது. பிதா எல்லா ஆசீர்வாதத்தின் ஊற்றுக் காரணர். அவர் எல்லாரையும் ஒன்றுபோல நேசிக்கிறவர். எல்லாரும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறவர். பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்பது அவருடைய மனவிருப்பம். ஆகையால் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் கர்த்தர் தன்னுடைய நல்ல பொக்கிஷசாலையைத் திறப்பார், நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அப்போது நீங்கள் கடன் வாங்குவதில்லை, கடன் கொடுக்கிறவர்களாய் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae