அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். 1 சாமு. 30:19.
வேதம் பிசாசை திருடன் என்று அழைக்கிறது. அவன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறவன் (யோவான் 10:10). அவன் உங்கள் ஆரோக்கியத்தை திருடுகிறவன், உங்கள் ஆசீர்வாதங்களை திருடுகிறவன். குடும்பங்களின் சந்தோஷத்தை, சமாதானத்தை திருடுகிறவன்.
தாவீது சவுல் ராஜாவுக்கு பயந்து ஓடி ஒளிந்துகொண்டிருந்த நாட்களில், ஒருமுறை தன் குடும்பத்தினர்களையும், அவனுடன் காணப்பட்ட மற்றவர்களுடைய குடும்பங்களையும் சிக்லாகு என்ற இடத்தில் தங்க வைத்தவிட்டு, தூரப்பகுதிக்கு கடந்துசென்ற வேளையில், அமலேக்கியர்கள் சிக்லாகுவின் மேல் விழுந்து, கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அங்கு காணப்பட்ட அத்தனைபேரையும் சிறைப்பிடித்துக்கொண்டு போனார்கள். தாவிதும் அவனோடிருந்வர்களும் பட்டணத்திற்கு திரும்பிவந்து பார்த்தவேளையில் தங்கள் மனைவிகளும், குமாரர்களும், குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்பதைக் கண்டு, தங்களுக்கு பெலனில்லாமல் போகுமட்டும் அழுதார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். ஆனாலும் தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திகொண்டு, கர்த்தரிடத்தில் விசாரித்தபின்பு, அமலேக்கியர் மேல் யுத்தம் செய்து, அவர்களை மேற்கொண்டு, ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்.
நம்முடைய தேவன், சத்துரு நம்மிடமிருந்துத் திருடின எல்லாவற்றையும் திருப்பித்தருகிறவர். ஆகையால் கர்த்தருக்குள்ளாக உங்களை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் ஆரோக்கியத்தை திரும்ப தருகிற தேவன். பலகீனப்படுத்துகிற ஆவிகள் உங்கள் ஆரோக்கியத்தை, பெலனை திருடியிருக்கலாம். நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 30:17). எசேக்கியா ராஜா, வியாதிப்பட்டு, ஆரோக்கியத்தை இழந்து, மரிததுபோவீர் என்று ஏசாயா தீர்க்கதரிசியால் அறிவிக்கப்பட்டவுடன், அவன் தேவனை நோக்கி மனங்கசந்து அழுதவேளையில், கர்த்தர் அவனை நினைத்தருளி ஆரோக்கியத்தை திரும்பகொடுத்து ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணினார். அதுபோல கர்த்தர் அவர் சிறகின்கீழ் இருக்கும் ஆரோக்கியத்தினால் உங்களை மூடுவார். உங்கள் சுகவாழ்வை துளிர்க்கச்செய்வார்.
இழந்துபோன ஆசீர்வதாங்களை இரட்டிப்பாக திரும்பதருகிறவர். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார் (யோபு 42:10). வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பார். நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள்.
இரட்சிப்பின் சந்தோஷத்தை, பாவங்களினிமித்தம் இழந்திருக்க கூடும். பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறவன், பாவஞ்செய்ய தூண்டுகிறவன். ஆனால் கர்த்தர், பாவங்களை மன்னித்து, இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் தருவார்(சங்கீதம் 51:12). இழந்து போன உற்சாகத்தை திரும்பவும் பெற்றுகொள்வீர்கள். குடும்ப வாழ்வில் இழந்துபோன மகிழ்ச்சியை திரும்பத்தருவார். இழந்துபோன சமாதானத்தை திரும்பவும் தருவார் இழந்துபோன வாய்ப்புகளைத் திரும்பதருவார். .
நீங்கள் இழந்துபோன எல்லாவற்றையும் கர்த்தர் திரும்பத்தந்து உங்களை மகிழப்பண்ணுவாராக. ஆமென்.
Pastor.
David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org