யோசு 10:12. கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XCJzhuLWWBA
எமோரியர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக வந்தபோது யோசுவா எப்படி அவர்களை மேற்கொண்டான் என்பதை யோசுவா 10:12 -15 வசனங்களை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். நமக்கு விரோதமாக வருகிற சூழ்நிலைகளை, பிரச்சனைகளை, எதிர்மறையான காரியங்களை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை இந்த வசனங்கள் மூலம் நாம் கற்றுக்கொள்ளலாம். ஒருவர் மற்றொருவரை கோபப்படுத்தினாலோ, எரிச்சலூட்டினாலோ, உடனே எதிர்செயலாற்றும் அநேக ஜனங்களை நாம் பார்க்கமுடியும்.
ஆனால் சூழ்நிலைகள் எதிராக வரும்போது யோசுவா முதலாவதாக கர்த்தரை நோக்கி பேசினான். இரண்டாவதாக சூழ்நிலைகளை பார்த்து பேசினான். அதாவது முதலாவதாக யோசுவா மேல்நோக்கி பேசினான், இரண்டாவதாக நேரடியாக இருக்கும் சூழ்நிலைகளாகிய சூரியனையும் சந்திரனையும் பார்த்து பேசினான். யோசுவாவின் இந்த செயலில் நாம் சிலுவையை பார்க்கமுடியும். நாமும் முதலாவது நம்முடைய எதிர்மறையான சூழ்நிலைகளை குறித்து கர்த்தரிடம் பேச வேண்டும். அவரிடம் பேசியபின்னர், சூழ்நிலைகளை பார்த்து பேச வேண்டும். எதிர்மறையான சூழ்நிலைகள் சூரியனாக இருந்தாலும் சந்திரனாக இருந்தாலும் உங்களுடைய பெலனுக்கு எட்டாத காரியங்களாக இருந்தாலும், அந்த சூழ்நிலைகளை குறித்து முதலாவது தேவனிடம் பேசுங்கள்.
இயேசு இரவு முழுவதும் பிணியாளிகளுக்காகவும், வியாதிபட்டவர்களுக்காகவும் தேவனை நோக்கி பேசினார். அதன் பின்பு தான் அவர் பிணியாளிகளை பார்த்து பார்வையடைவாயாக, எழுந்து நட, சுத்தமாகு என்றெல்லாம் சூழ்நிலைகளை பார்த்து பேசினார். இயேசு பிதாவோடு தனித்திருந்த பிறகு தான், சீஷர்களை தெரிந்துகொண்டார். சீஷர்கள் ஒருமுறை இயேசுவிடம், எங்கள் விசுவாசத்தை வர்த்திக்க பண்ணும் என்று மேல்நோக்கி பேசினபிறகே, ஆண்டவர் அவர்களிடம் கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும் (லுக் 17:6) என்று சொன்னார். காட்டத்திமரத்தை போன்ற நம்முடைய பாவங்களை பிடுங்கி நமக்கு முன்பாக வைத்துவிடக்கூடாது; மாறாக அதை கடலில் நட்டு விட வேண்டும். நம்முடைய ஆண்டவர் நம்முடைய பாவங்களை கடலின் ஆழத்தில் போடுகிறவர்.
யோசுவாவை போல, இயேசு நமக்கு கற்று கொடுத்ததுபோல, இனிமேல் உங்களுக்கு விரோதமாக இருக்கும் எல்லா சூழ்நிலைகளையும் கண்டு பயந்துவிடாமல், முதலாவது மேல்நோக்கி கர்த்தரிடமும், பின்பு நேரடியாக சூழ்நிலையோடும் பேசுங்கள். இதுவே எதிர்மறையான சூழ்நிலையை மேற்கொள்ளும் வழி.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org