உங்கள் சொல்கேட்டு அதின்படி செய்யும் கர்த்தர்.

இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை. கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார் (யோசுவா 10:14).

கர்த்தர் உங்களுடைய சொல்கேட்கிறவர். உங்கள் ஜெபங்களைக்கேட்டு, உங்களுக்காக அவருடைய சகலசிருஷ்டிகளையும் கீழ்படியும்படி செய்கிறவர். உங்களுக்காக யுத்தம்செய்யும் கர்த்தர்.

யோசுவா, இஸ்ரவேல் ஜனங்களுக்காக கானானை பங்கிடுவதற்கு முன்பு 31 இராஜாக்களையும் 7 ஜாதிகளையும் யுத்தம்செய்து துரத்தவேண்டியாயிருந்தது.  அவர்களில் ஒருகூட்டமான எமோரியரை கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுத்த அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான். அவர்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; ஏறக்குறைய ஒரு பகல்முழுவதும் நடுவானத்தில் நின்றது. எதிரிகளின் கூட்டத்தை முழுவதுமாய் சங்காரம்செய்யும் மட்டும்  சூரியனும், சந்திரனும் தரித்து நின்றது.

கர்த்தருடைய ஜனங்கள், இயேசுவின் நாமத்தில் பேசுகிற காலமிது. மரணமும் ஜீவனும் நம்முடைய நாவின் அதிகாரத்திலிருக்கிறது (நீதி. 18:21).  இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள் (ஏசா. 45:11). நாம் கர்த்தருடைய கரங்களின் கிரியைகளுக்கு கட்டளையிட்டு ஜெபிக்கும் நாட்கள் இவை. தடைகளைப் பார்த்து பேசும் நாட்கள், உலர்ந்த எலும்புகளைப்போல, சோர்ந்துபோய், பின்மாற்றத்திற்குள்ளாக காணப்படுகிறவர்கள் உயிர்ப்பிக்கப்பட ஜீவனுள்ள கர்த்தருடைய வார்த்தைகளை பேசுகிற நாட்கள். எழுப்புதல் தீ எங்கும் பற்றி எரிய எழுப்புதல் அக்கினியை அனுப்பும் என்று கட்டளையிடுகிற நாட்கள். கர்த்தருடைய ஜனம் பேசவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

உங்கள் பர்வதங்களைப்பார்த்து பேசுங்கள். பர்வதங்களை குறித்து அல்ல, அவைகளுடைய தோற்றம், வலிமையைக்குறித்து அல்ல, அவைகளைப்பார்த்து பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளைக் குறித்து, வியாதிகளைக் குறித்து, கஷ்டங்கள், பற்றாக் குறைகள், பாடுகளைக் குறித்து அல்ல, அவற்றைப்பார்த்து இயேசுவின் நாமத்தில் பேசுங்கள். அற்புதங்கள் நடக்கும். உங்களை அதிசயங்கள் காணச்செய்வார். சத்துருவின் கிரியைகள் அழியும்.   புறஜாதியானாய் காணப்பட்ட நூற்றுக்கு அதிபதி இயேசுவின் வார்த்தையில் உள்ள வல்லமையை அறிந்திருந்தான். ஆகையால் நீர் ஒருவார்த்தை சொல்லும் என்று வேண்டினான்.  கர்த்தருடைய வார்த்தையில் வல்லமை காணப்படுகிறது. அந்த ஜீவனுள்ள வார்த்தைகளை உங்கள் நாவின்மூலம் நீங்கள் பேசும்போது, நீங்கள் பேசுகிறபடி ஆகும். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (மாற்கு 11:23).

கர்த்தர் தாமே உங்கள் சொல்கேட்டு அதன்படி உங்களுக்கு அற்புதங்கள் செய்து உங்களை மகிழப்பண்ணுவாராக.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Periya Parvathangal Samaboomiyagum, Uthamiyae Vol. 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *