எலியாவின் தேவன் (God of Elijah).

2 இராஜா 2:14 எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YniygqnvCgo

நம்முடைய தேவன் ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று அழைக்கப்படுகிறார். இஸ்ரவேலின் தேவனென்றும், இராணுவங்களின் தேவனென்றும் அழைக்கப்பட்டார். அதுபோல எலிசா தேவனை குறிப்பிடும்போது அவர் எலியாவின் தேவன் என்று அழைக்கிறான். யோசுவா தனக்கு முன்பாக கர்த்தருக்காக ஓடின மோசேயை ஞாபகப்படுத்திக்கொண்டான். அதுபோல, தனக்கு முன்பாக ஓடின எலியாவை எலிசா ஞாபகப்படுத்தி சொல்லுகிறான் எலியாவின் தேவன் எங்கே என்பதாக.

எலியா தீர்க்கதரிசியாக இருந்தாலும், அவனும் உபத்திரவத்தின் பாதையில், பஞ்சத்தின் பாதையில் கடந்து சென்றான். போதும் ஆண்டவரே, என் உயிரை எடுத்துக்கொள்ளும் என்ற நிலைக்கு எலியா தள்ளப்பட்டான். அவ்வளவாக யேசபேலினிமித்தம் அவனுக்கு பயமுறுத்தல்கள் வந்தது. காரணம், எலியா நம்மைப்போல் பாடுள்ள மனுஷனாய் இருந்தான் (யாக் 5:17). இருந்தாலும் தேவன் எலியாவை விடவில்லை, எலியாவும் தேவனை விடவில்லை. வசனம் சொல்லுகிறது, கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார் (1 இராஜா 17:22); கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்தது (1 இராஜா 18:46) என்பதாக. இவையிரண்டினிமித்தம் எலியா வல்லமையுள்ள தீர்க்கதரிசியாய் விளங்கினான், எலியாவின் தேவன் என்றும் அழைக்கப்பட்டான்.

எலியா மிகுந்த விசுவாசமுள்ளவன்; விசுவாசத்தோடு இறந்துபோன பிள்ளையை உயிரோடு எழுப்பினான். எலியா கீழ்ப்படிதலுள்ள பாத்திரம்; ஆண்டவர் பஞ்சம் வந்தபோது நதியோரத்தில் போய் தங்கியிரு என்று சொல்லும்போது, அதற்கு கீழ்ப்படிந்தான், பின்பு, ஒன்றுமில்லாத விதவையின் வீட்டில் போய் தங்கியிரு என்று சொல்லும்போது, அதற்கும் கீழ்ப்படிந்தான். எலியா தைரியமுள்ளவன்; பாகால் தெய்வமானால் பாகாலை சேவியுங்கள், கர்த்தர் தெய்வமானால் கர்த்தரை சேவியுங்கள் என்று ஜனங்களுக்கு முன்பாகவும் ஆகாப் இராஜாவுக்கு முன்பாகவும் கர்ச்சித்தவன். அதுமாத்திரமல்ல, எலியா மிகப்பெரிய ஜெப வீரன்; மழை பெய்யாதபடிக்கும், மழை பெய்யும்படிக்கும் கருத்தாய் ஜெபித்தான். ஆண்டவர் அவனுடைய ஜெபத்தை கேட்டார். எலியா வானத்திலிருந்து அக்கினியை இறக்கியவன், பல அற்புதங்களை செய்தவன், இராஜாவையும் எதிர்த்து நிற்க தயங்காதவன், பாகாலை நிர்மூலமாக்கியவன், பாகால் தீர்க்கத்தரிசிகளை ஒன்றுமில்லாமலாக்கி போட்டவன், ஆவியானவருடைய அபிஷேகத்தினால் நிரம்பியவன், மிகப்பெரிய தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டவன். இந்த எலியா ஏனோக்கை போல மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டவன். இப்படிப்பட்ட எலியாவின் பெயரை நினைத்து, என்னுடைய ஆண்டவர் எலியாவின் தேவன் என்று எலிசா அழைக்கிறான். நம்மையும் பார்த்து ஜனங்கள் சொல்ல வேண்டும், நாம் ஆராதிக்கும் மெய்த்தேவன், குறிப்பிட்ட இந்த நபரின் தேவன் என்பதாக. அப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறவராய் காணப்படுகிறார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *