இம்மானுவேல்,     தேவன் நம்மோடிருக்கிறார் (Immanuel, God with us).

அவன்: இதோ,     ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் (மத்.1:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/oNuEmpgJ2iw

ஒரு வருடத்தின் கடைசி மாதத்தில் பிரவேசிக்கும் படிக்கு கிருபை பாராட்டின கர்த்தருக்கு நன்றி பலிகளை நாம் ஏறெடுப்போம். இந்த வருடத்தைப் பல எதிர்பார்ப்புகளோடு துவங்கின அனேகர் இன்று இல்லை. ஆனால் கர்த்தர் நம்மை நன்றாய் வைத்து அனுதினமும்  விருத்தியடையும் படிக்குச் செய்துகொண்டு வருகிறார். இந்த புதிய மாதத்திலும் அவர் இம்மானுவேலாய் உங்களோடிருப்பார்,     உலகத்தின் முடிவு பரியந்தமும் அவர் உங்களை விட்டு விலகமாட்டார். ஏசாயா  தீர்க்கதரிசன புத்தகத்தில்,     ஆகாஸ் ராஜாவின் நாட்களில் பிறந்த ஒரு குழந்தைக்கு   இம்மானுவேல் என்ற பெயரை அடையாளமாய் போடும் படிக்குக் கர்த்தர் கூறுகிறதைப் ஏசாயா 7:14ல் வாசிக்கமுடிகிறது. அந்த அடையாளத்தின் நிமித்தம் யூதாவின் ஜனங்களுக்கு  எதிராக யுத்தம் செய்து கொண்ட வந்த இஸ்ரவேலர்களிடமிருந்தும்,     அசீரியர்களிடமிருந்தும்,     யூதாவின் குடிகளுக்கு  விடுதலையுண்டாகும்  என்பது அந்த பெயரினுடைய முதல் அர்த்தமாகும்.  தேவன்  இம்மானுவேலாய் யூதாவின் ஜனங்களோடு காணப்பட்டு அவர்களுக்கு உதவிசெய்வார் என்பதாகும். இரண்டாவது,     ஏசாயாவின்  நாட்களிலிருந்து  சுமார் எழுநூறு வருடங்களுக்குப் பிறகு,     மேசியாவாகிய இயேசு,     உலகத்தின் முடிவு பரியந்தமும் நம்மோடு இருப்பதற்காக,     இம்மானுவேலாக பிறக்கப் போகிறதைக் குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனமாகும். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     அண்டச் சராசரங்களைச் சிருஷ்டித்த சர்வ வல்லமையுள்ள தேவன்,     நம்மோடிருக்கும்படிக்கு,     சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மாமிசத்தில் அவதரித்தார்   என்பதை அறியும் போது மகிழ்ச்சியும்,     சந்தோஷமும் நம்மை நிரப்புகிறது. இந்தச் செய்திதான் பண்டிகைக் காலங்களில் நமக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. வார்த்தையாகிய தேவன்,     மாமிசத்தில் வெளிப்பட்டு,     நம்மோடு வாசம் செய்கிறார். அவர் உங்கள் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும்  உங்களோடு காணப்படுவார். நீங்கள் பாடுகளின் பாதையில் கடந்து செல்லும் போதும்,     உங்கள் வியாதிகளின் நேரத்திலும்,     தனிமையின் நேரத்திலும்,     உங்கள் தேவையின் மத்தியிலும் அவர் உங்களோடு கூட இருப்பார். அனேக வேளைகளில்,     இயேசுவின் சீயோனாய்,     மணவாட்டியாய் காணப்படுகிற நாம்,     கர்த்தர் என்னைக் கைவிட்டார்,     ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறோம்.   ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல்,     தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும்,     நான் உன்னை மறப்பதில்லை,     இதோ,     என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,     உன் மதில்கள்,     அதாவது உன் நினைவுகள் எப்போதும் என்முன் இருக்கிறது என்பதாக ஆண்டவர் கூறுகிறார். இந்த மாதம் முழுவதும் கர்த்தர் உங்களோடு கூட இருந்து உங்களை ஜெயமாக நடத்துவார். அவருடைய பிரசன்னம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர் உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற எல்லாத் தடைகளை நீக்கிப்போடுவார்,     உங்களை அற்புதங்களையும்,     அதிசயங்களையும் காணுப்படிக்குச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.



Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *