நம்முடைய ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணினார் (LORD prolongs our life).

நீதி 10:27. கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wJIjgqFD0vA

வருஷத்தின் கடைசி மாதத்திற்கு அழைத்துவந்த தேவனுக்கு நன்றி செலுத்தும் நாட்களாய் இந்நாட்கள் காணப்படுகிறது. வருஷத்தை நன்மையினால் நிரப்புவேன் என்று கூறியவர், ஆயுசுநாட்களை நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்விலும் பெருகபண்ணியிருக்கிறார். மனுஷனின் சுவாசம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. அது நாட்டின் முதல் குடிமகனாக இருந்தாலும் சரி, நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் குடிமகனாக இருந்தாலும் சரி, எல்லாருடைய சுவாசத்தையும் கர்த்தர் தன்னுடைய கரத்தில் வைத்திருக்கிறார். யாருக்கு எப்பொழுது இவ்வுலகத்தில் கடைசி நாள் என்று கர்த்தர் ஒருவருக்கு மாத்திரமே நன்றாக தெரியும். இப்படி இருக்க 2024 வது வருஷத்தின் கடைசி மாதத்தில் கர்த்தர் நம்மை கொண்டு வந்து ஆயுசு நாட்களை பெருகபண்ணியிருக்கிறாரே, நம் ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.

மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது நாம் கர்த்தருக்கு பயப்படும்போது நம்முடைய ஆயுசு நாட்கள் பெருகும் என்பதாக. ஆகையால் நம்முடைய எல்லா நடக்கைகளிலும் கர்த்தருக்கு பயந்து ஜீவிக்க நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அதுபோல யாத் 20:12 கூறுகிறது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதாக. நீதி 3:1-2 கூறுகிறது, என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும் என்பதாக. ஆகையால் வாழ்நாளில் தீர்காயுசை பெற்றுக்கொள்ள கர்த்தருடைய வார்த்தைக்கு பயந்து ஜீவியுங்கள், பெற்றோர்களை கணம் பண்ணுங்கள்.

இம்மட்டும் கர்த்தர் கிருபையாய் கொடுத்த ஆயுசின் வருஷங்களுக்கு நன்றி செலுத்துங்கள். இந்த வருஷத்தில் சந்தித்த உபத்திரவங்கள், வியாகுலங்கள், துன்பங்கள், பயம், பசி, பஞ்சம், நாசமோசம், திகில், வேலைப்பளு, கலக்கம் எல்லாவற்றிற்கும் தப்புவித்து நன்மையான வருஷத்தை கர்த்தர் கொடுத்தார். செங்கடலை கடந்து யோர்தானை தாண்டுவது சிரமமாக இருந்தாலும், இந்த வருஷத்தில் செங்கடலை கடக்கவும், யோர்தானை தாண்டவும் கர்த்தர் கிருபை செய்தார். பொருளாதார நெருக்கடியினிமித்தம், உயிரை மாய்த்தவர்கள் ஏராளம். ஆனால் கர்த்தர் பொருளாதார நெருக்கடிகளை மாற்றி ஆயுசின் வருஷத்தை பெருகப்பண்ணினார். மனக்கவலைகள், உடல் நல கேடுகளால், உயிரை மாய்த்தவர்கள் அநேகர். ஆனால் கர்த்தர் கிருபையாய் நம்முடைய ஆயுசின் நாட்களை பெருகபண்ணினார். ஆகையால் இயேசுவுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *