முன்மாதிரியான குடும்பம் (A model family).

அவர்கள்  இருவரும் கர்த்தரிட்ட சகல  கற்பனைகளின்படியேயும்  நியமங்களின்படியேயும்  குற்றமற்றவர்களாய் நடந்து,      தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்(லூக்கா 1:6).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qcR8FvtKIsY

சகரியாவும்,      எலிசபெத்தும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் கர்த்தருடைய கற்பனைகளையும்,      நியமங்களையும் கைக்கொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் குற்றமற்றவர்களாகவும்,      நீதியுள்ளவர்களாயும் காணப்பட்டார்கள். சகரியா  ஆசாரிய ஊழியத்தைச் செய்கிறவனாயும் காணப்பட்டான்.  எலிசபெத்தும் தீர்க்கதரிசியாய் காணப்பட்டாள்,      அவள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,      மரியாளைப் பார்த்து,      ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்,      உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது,      விசுவாசித்தவளே பாக்கியவதி,      கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவை நிறைவேறும் என்று தீர்க்கதரிசனமாய் கூறினாள். இப்படி,      புருஷன் மனைவி இரண்டு பேரும் கர்த்தரிடத்திலிருந்து நற்சாட்சி பெற்று,      அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறவர்களாய்  வாழ்கிற குடும்பம் பாக்கியமுள்ளது. 

கர்த்தர் நோவாவை குறித்துக் கூறும் போது,      இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன் என்றார்(ஆதி.7:1).  அதுபோல,      யோபுவைக் குறித்தும் உத்தமனும் சன்மார்க்கனும்,      தேவனுக்குப் பயந்து,      பொல்லாப்புக்கு விலகுகிறவன் (யோபு 1:1) என்று, அவனைக் குறித்து மாத்திரம் கர்த்தர் நற்சாட்சி கொடுத்தார். இவர்கள் இருவரும் நீதிமான்களாயும்,      குடும்பஸ்தர்களாயும் இருந்தும்,      அவர்களுடைய மனைவிகளுடைய நல்ல சுபாவங்களைக் குறித்து கர்த்தர் ஒன்றும் கூறவில்லை. கர்த்தருடைய பிள்ளைகள்,      புருஷன் மனைவியாய் இணைந்து,       கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழுங்கள். ஆக்கில்லா,      பிரிஸ்கில்லா என்ற குடும்பம்,      பவுலோடு இணைந்து,      அவன் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்து,      சபை கூடிவருவதற்கு தங்கள் வீட்டையும் கொடுத்து,      நற்சாட்சியுடன் வாழ்ந்தார்களோ,      அப்படியே நீங்களும் வாழுங்கள். 

ஒருநாள் சகரியா தன் ஆசாரிய முறைமையின் படி தேவாலயத்தில் தூபங்காட்டிக் கொண்டிருந்த நேரத்தில்,      காபிரியேல் தூதன் தோன்றி,      சகரியாவே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது,      உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்,      அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக,      உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்,      அவன் பிறப்பினிமித்தம்  அநேகர் சந்தோசப்படுவார்கள்,      அவன் பெரியவனாயிருப்பான்,      அவன் இஸ்ரவேல் சந்ததியாரில்  அநேகரைத்   தேவனாகிய கர்த்தரிடத்திற்குத்  திருப்புவான் என்றான். அவர்களுடைய சாட்சியுள்ள குடும்ப ஜீவியம் அவர்களுக்கு அற்புதத்தைக் கொண்டு வந்தது. காலதாமதமான அற்புதமாய் அவர்களுடைய கண்களுக்குத்  தென்பட்டாலும்,      இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்துகிற ஒரு பெரிய தீர்க்கதரிசியைப் பெற்றெடுக்கும்  பாக்கியத்தைத் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகளே,      உத்தமமாய் கர்த்தரைப்  பின்பற்றுகிறோம்,      எங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதங்களும் நடக்கவில்லையே என்று அங்கலாய்க்கிறவர்களாய் காணப்படுகிறீர்களோ,      ஆண்டவர் உங்களுக்கு ஒரு உன்னதமான,      மேன்மையான அற்புதத்தை வைத்திருக்கிறார்,      அதைத் துரிதமாய்  உங்களுக்குத் தந்து உங்களை மகிழ்விக்கப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆகையால் தொடர்ந்து,      கர்த்தருக்குப் பயந்து,      அவருடைய வசனங்களின் படியும்,      நியமங்களின் படியும் நீதிக்குரிய வாழ்க்கை வாழ உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *