நாம் கர்த்தருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம் (We may live in His presence).

ஓசி 6:1,2 கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/x_ZjlGWl8c8

கர்த்தரிடத்தில் திரும்புவதால் அல்லது நாம் ஆதி அன்பிற்கு திரும்பினால், கர்த்தர் கொடுக்கும் வாக்குத்தத்தம் நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம் என்பதாக. ஆண்டவர் வெளிப்படுதல் விசேஷத்தில் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு என்று எபேசு சபையை குறித்து சொல்லுவார். நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக என்று கர்த்தர் கூறுகிறார். இந்த ஆதி நிலைக்கு நாம் செல்லும்போது, நம்முடைய ஆவி மீண்டும் கர்த்தருக்கு முன்பாக பிழைத்திருக்கும். தூரம் திரிந்த சீயோனை போல இந்த வருஷத்தில் நாம் இருந்திருப்போமென்றால், புதிய வருஷத்திற்குள் பிரவேசிக்கும் முன்பதாகவே ஆதி நிலைக்கு அதாவது கர்த்தரிடத்திற்கு திரும்பவும் வந்து விடுங்கள். அவர் உங்களை பிழைக்கும்படி செய்வார். பாவத்தின் விளைவாக உங்களை பின் தொடர்கிற பாவத்தின் கிரியைகள், சாபத்தின் கிரியைகள், மரண கண்ணிகளுக்கு உங்களை தப்புவித்து சாகாமல் பிழைத்து அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படி கர்த்தர் செய்வார்.

அவர் நம்மை பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார். தகப்பன் சிட்சியாத புத்திரன் இல்லை. அவர் நம்மை சிட்சிப்பது நாம் நல்வழியில் நடக்கவேண்டும் என்பதற்காகவே அவர் சிட்சிக்கிறார். நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். யெகோவா யீரே, யெகோவா ஷாலோம் போன்ற நாமங்களை போல ஆண்டவருக்கு யெகோவா மாக்கே (எசே 7:9) என்ற நாமமும் காணப்படுகிறது. யெகோவா மாக்கே என்றால் அடிக்கிறவராகிய கர்த்தர் நான் என்று அர்த்தம். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை ஏன் அடிக்கிறார்கள்?. அவர்களை தண்டிக்கும்படி அடிப்பதில்லை, மாறாக, மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்பதற்காக அடிக்கிறார்கள். அதுபோல நம்முடைய தவறை நாம் சரிசெய்துகொள்ள சில வேளைகளில் நம்முடைய ஆண்டவர் யெகோவா மாக்கேவாக நமக்கு வெளிப்படுகிறார். யெகோவா யீரே, யெகோவா ஷாலோம் என்று அவருடைய நாமங்களை துதிக்கின்ற நாம் யெகோவா மாக்கே என்று சொல்லி துதிப்பதும் நல்லது. காரணம் நம்மை அவருடைய அடிகள் செம்மையான வழியில் நடத்துகிறது, நம்முடைய காயங்களை கட்டுகிறது.

ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கை கிறிஸ்துவின் மரணமாகிய பெரிய வெள்ளியோடு முடிவடைவதில்லை. உயிரோடு எழுப்புகிற ஈஸ்டர் ஞாயிறும் நம்முடைய வாழ்வில் வரும். இயேசு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்ததுபோல நாமும் அவரோடு எழுந்து, அவருக்கு முன்பாக பிழைத்திருப்போம். ஆதிநிலைக்கு திரும்புவோம், அப்பொழுது நாம் கர்த்தருடைய சமூகத்தில் என்றென்றும் பிழைத்திருப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *