உங்கள் தாழ்ந்த நிலையை நோக்கிப்பார்க்கிற தேவன் (God is mindful of your humble state).

அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார், இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்(லூக்கா 1:48).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/d0fWj3moVs8

மரியாள் ஆவியில் களிகூர்ந்து, நன்றி நிறைந்த இருதயத்தோடு  கர்த்தரை  நோக்கி நீர் என்னுடைய தாழ்ந்த நிலையை நோக்கிப் பார்த்தீரே என்று கூறுகிறதை பார்க்கமுடிகிறது. அவளும், யோசேப்பும் யூதா கோத்திரத்தை சேர்ந்தவர்களாயும், ராஜாவாக காணப்பட்ட ஐசுவரிய வானாகிய தாவீதின் குடும்பத்தைச்  சேர்ந்தவர்களாயிருந்தும் ஏழ்மை நிலையில் காணப்பட்டார்கள். யோசேப்பு ஒரு தச்சனாகக் காணப்பட்டான். அவர்களுடைய ஏழ்மை நிலையிலும், இருவரும் கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஆகையால் யூதேயாவில்  அனேக கன்னிகைகள் காணப்பட்டிருந்தும் கர்த்தர் மரியாளை தன்னுடைய  சித்தத்தை நிறைவேற்றுகிற பாத்திரமாகத் தெரிந்து கொண்டார். ஒரு நாள்  காபிரியேல் தூதன் கன்னிகையாகிய மரியாளிடம் வந்து இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக  என்றான். மரியாள் தேவ தூதனை நோக்கி இது எப்படியாகும்?  நான் இன்னும்  புருஷனை அறியவில்லையே என்றாள். அவன் பரிசுத்த ஆவி உன்மேல் வரும்,  உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், தேவனால் எல்லாம் கூடும்  என்றான். உடனே மரியாள் நான் ஆண்டவருக்கு அடிமை, அவருடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்று கர்த்தருடைய சித்தத்திற்குத் தன்னை  அர்ப்பணித்தாள். அத்துடன் கர்த்தருடைய வார்த்தையை அவள் அப்படியே  விசுவாசித்து, இயேசுவை தன்னுடைய இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டாள்,  ஆகையால் ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளாயும், பாக்கியவதியாகவும் அவள் மாறினாள்.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் தாழ்ந்த நிலையைக் கர்த்தர் அறிந்திருக்கிறார். அவரைப் போல உங்களைப் புரிந்து கொண்டவர்கள் ஒருவரும் இல்லை.  கர்த்தர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார், அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார் என்று சங்கீதம் 113:7,8 கூறுகிறது. அவர் ஏற்றக் காலத்தில் உங்களை உயர்த்தும் படிக்கு அவருடைய பலத்த கரத்திற்குள்ளாக  அடங்கியிருங்கள். நம்மில் அனேகர் உயர்ந்த நிலையில் இன்று காணப்படுவதின் காரியம், கர்த்தர் நம்மைத் தாழ்வில் நினைத்ததின் நிமித்தம் என்பதை  மறந்து விடாதிருங்கள். தாழ்வில் நம்மை நினைத்த தேவனுடைய கிருபையை  எண்ணி ஒவ்வொரு நாளும் அவருக்கு நன்றி செலுத்துங்கள். குறிப்பாக  வருஷத்தின் கடைசியில் காணப்படுகிற இந்நாட்களில் அதிகமாக நன்றி  செலுத்துங்கள். அனேக வேளைகளில் இஸ்ரவேல், யூதாவின் இராஜாக்களைப் போல பெருக்கமும், விசாலமும், உயர்வும் நமக்கு வரும் போது மேட்டிமையாகி கர்த்தரை மறந்து விடுகிறோம். யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின  தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டை பண்ணினான் என்று உபா. 32:15  நம்மை  எச்சரிக்கிறது. ஆகையால்  நம்முடைய தாழ்ந்த நிலையில் நம்மை நினைத்த தேவனுக்கு முன்பாக தாழ்மையோடு ஜீவிக்க நம்மை அர்ப்பணிப்போம், அப்போது கர்த்தர் உங்களை மேன்மேலும் உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *