என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. சங்கீதம் 103:1,2.
தாவீது தன் ஆத்துமாவோடு கர்த்தர் செய்த உபகாரங்களை மறந்துவிடாதே என்று பேசுகிறான். ஆட்டிடையனாய் காணப்பட்டு, தன்னுடைய சகோதரர்களாலும், பெற்றோர்களாலும், அற்பமாய் எண்ணப்பட்டு, வனாந்தரமே வாழ்க்கையாய் காணப்பட்டவனைக் கர்த்தர் தெரிந்தெடுத்து, முழு இஸ்ரவேல் தேசத்திற்கும் ராஜாவாய் மாற்றி உயர்த்தினதை நினைத்து, கர்த்தர் செய்த அனேக உபகாரங்களை மறந்துவிடாதே என்று தன் ஆத்துமாவோடு கூறுகிறான். அதோடு தன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, நோய்களைக் குணமாக்கி, பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் திருப்தியாக்கி, இளவயதின் பெலனைக்கொடுத்து தன்னை ஆசீர்வதித்து உயர்த்தின தேவனை நன்றியோடு நினைவுகூருகிறான். ஆகையால் தான் உடன்படிக்கை பெட்டிக்கு முன்பு கூட தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான். சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்று அவமதித்தாள். அதற்குத் தாவீது: உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும் படிக்குத் தெரிந்து கொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். இதைப்பாக்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன், என்னை இன்னும் தாழ்த்துவேன் என்றான். கர்த்தர் நம்மை நினைத்தருளி, கொடுத்த ஆசீர்வாதங்களுக்காக நன்றி கூறுவதுதான் நாம் இன்னும் உயர்த்தப்படுவதின் இரகசியமாய் காணப்படுகிறது. ஆனால், அனேக வேளைகளில் கர்த்தர் இம்மட்டும் உதவிசெய்த காரியங்களை மறந்து, இன்னும் வேண்டும் என்னும் பேராசையுள்ளவர்களாய் காணப்படுகிறோம். நன்றி செலுத்த மறந்துவிடுகிறோம்.
கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை செய்த நன்மைகளைப் பட்டியல் போட்டால் அவைகள் கணக்கில்லாதவை. உலகில் திரளான ஜனங்கள் நம்மைவிட நல்லவர்களாய் காணப்பட்டிருந்தும், நம்மை அவருடைய பிள்ளைகளாய் தெரிந்துகொண்டாரே அதுவே பெரிய பாக்கியம். அவருடைய இரத்தத்தினால் பாவங்களற நம்மைக் கழுவி, மீட்டெடுத்து, விலையேறப்பெற்ற இரட்சிப்பைக் கொடுத்தாரே அது அவருடைய பெரிதான ஈவு. நல்ல வேலைகளைக் கொடுத்து, குடும்பங்களைக் கொடுத்து, பிள்ளைகளைக்கொடுத்து ஆசீர்வதித்திருப்பது அவருடைய இரக்கம். நல்ல உணவு, உடை, உறைவிடம் கொடுத்திருப்பது அவருடைய தயவு. இப்படி ஆண்டவர் செய்த உபகாரங்கள் அனேகம்.
கர்த்தர் நன்றிப்பலிகளை எதிர்பார்க்கிறார். உபாகமம் 6:10-12 வசனங்களில் எழுதப்பட்டிருக்கிறது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திருப்தியாகும்போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு, மறந்துபோய்விடாதபடி நன்றி செலுத்து என்பதாய் கர்த்தர் கூறுகிறார். அதுபோல பத்து குஷ்ட ரோகிகளில் ஒருவன் திரும்பிவந்து நன்றி செலுத்தின வேளையில் மற்ற ஒன்பது பேரும் எங்கே என்று வினாவுகிறார். காத்தர் நம்முடைய வாழ்க்கையில் பாராட்டின ஈவுகளை நினைத்து சங்கீதக்காரனைப்போல கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன் (சங்கீதம் 116:12-13) என்று அவரை நன்றியுள்ள இருதயத்துடன் தொழுதுகொள்ளுவோம். அப்போது காத்தர் இன்னும் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த உபகாரங்களை நினைத்து நன்றிகூறுகிற இருதயங்களைத் தந்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org