அப் 9:31. அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/3lAskKXofyE
அப்போஸ்தல நடப்படிகளின் புஸ்தகமே ஒரு எழுப்புதலின் புஸ்தகம். ஆதி அப்போஸ்தல நாட்களில் பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் இறங்கியபின்பு மிகப்பெரிய எழுப்புதல் உண்டானது. அப்போஸ்தலர்கள் புறப்பட்டுப்போன இடமெல்லாம் பாகால்கள் ஒழிக்கப்பட்டது. மந்திரவாதிகள் மனம் திரும்பினார்கள். பூசாரிகள் மந்திர புத்தகங்களை சுட்டெரித்தார்கள். பட்டணங்கள் தோறும் எழுப்புதல் உண்டானது. ஆதிசபை எழுப்புதலில் சபைகள் எண்ணிக்கையிலும் பெருகியது, தரத்திலும் பெருகியது. அப்போஸ்தல நடப்படிகளில் சபைகள் எப்படி பெருகியது என்று பார்க்கலாம்.
அப் 5:14ல் திரளான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார்கள். அப் 6:1ல் சீஷர்கள் பெருகினார்கள். அப் 6:7ல் சீஷர்களுடைய தொகை மிகவும் பெருகிற்று. அப் 9:31ல் சபைகள் வளர்ந்து பெருகின. அப் 16:5ல் சபைகள் நாளுக்கு நாள் பெருகின. அப் 17:6ல் உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள் என்று சொன்னார்கள்.
சபை ஆரம்பித்தபோது 120 பேர் தான் இருந்தார்கள்(அப் 1:14,15). பேதுருவின் முதல் பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் எடுத்து சபையில் சேர்க்கப்பட்டார்கள்(அப் 2:41). அதன்பின்பு இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார் (அப் 2:47). ஜெப ஆலயத்தில் இருந்த சப்பாணி சுகத்தை பெற்றபோது 5000 பேர் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். பொய் சொன்ன அனனியாவும் சப்பீராளும் பட்சிக்கப்பட்டபோது, திரளான ஜனங்கள் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (அப் 5:14). இப்படி சபை பெருகிக்கொண்டே போனது. அற்புதங்களும் அடையாளங்களும் திரளாய் காணப்பட்டது.
ஆதி சபையில் உண்டான எழுப்புதலின் நாட்களில், ஜனங்கள் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்தார்கள். ஆதி சபை ஒருமானதாய் ஜெபித்தார்கள் (அப் 1:14,15). வழக்கமாய் ஜெபித்தார்கள் (அப் 3:1). வாக்குத்தங்களை பிடித்து ஜெபித்தார்கள் (அப் 4:24). மத்தியானத்தில் ஜெபித்தார்கள் (அப் 10:9). எப்பொழுதும் ஜெபித்தார்கள் (அப் 10:2). ஊக்கமாய் ஜெபித்தார்கள் (அப் 12:5). பதில்வரும் வரை ஜெபித்தார்கள் (அப் 12:12). இப்படியாக இந்நாட்களிலும் ஜெபிக்கிற சபையே எழுப்புதலை பெற்றுக்கொள்ளும் சபையாய் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ஆதி சபை ஆத்தும ஆதாயம் செய்யும் சபையாக இருந்தது என்று அப் 5:42 கூறுகிறது, தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். அப் 10:24ல் புறஜாதியனான கொர்நேலியுவின் வீட்டில் ஆத்தும அறுவடை நடந்தது. அப் 20:20ல் பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து உபதேசம்பண்ணினேன் என்று எழுதப்பட்டிருக்கிறது. அப் 20:26ல் தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன் என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்படி இந்நாட்களிலும் நாம் ஆத்தும ஆதாயம் செய்பவர்களாய் காணப்பட வேண்டும்.
அதுபோல, ஆதி சபை வசனத்தில் வளர்ந்தது. அப் 6:7ல் தேவவசனம் விருத்தியடைந்தது. அப் 12:24ல் தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. நாமும் வசனத்தில் பால் உண்கிறவர்களாக அல்ல, பலமான ஆகாரம் சாப்பிடுகிறவர்களாக காணப்பட வேண்டும்.
ஆதி அப்போஸ்தல நாட்களில் வரங்கள் திரளாய் கிரியை செய்தது. அந்தியோகிய சபையில் தீர்க்கதரிசன வரம் கிரியை செய்தது (அப் 13:1). அற்புதங்கள் செய்யும் வரம் கிரியை செய்தது (அப் 13:12). பவுல் மூலமாக போதிக்கின்ற வரம் கிரியை செய்தது, பர்னபா மூலம் குணமாக்கும் வரம் கிரியை செய்தது (அப் 14:12). பிலிப்பிய சபையில் ஆவிகளை பகுத்தறிகிற வரம் கிரியை செய்தது (அப் 16:18). எபேசு சபையில் அந்நியபாஷைகளை பேசி தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் கிரியை செய்தது (அப் 19:6). இப்படியாக ஆவியானவரது வரங்கள் பலமாய் கிரியை செய்தது. நம்முடைய நாட்களிலும் ஆவியானவருடைய வரம் இன்னும் அதிகமாய் வெளிப்படும். ஆதி சபையில் கண்ட எழுப்புதலை காட்டிலும் பத்து மடங்கு அதிகமான எழுப்புதலை நாம் காணப்போகிறோம். அதற்கு ஆயத்தமாகிக்கொள்ளுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org