எஜமானுக்கு உபயோகமான பாத்திரம் (Useful vessel to the Master).

ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான(2 தீமோத். 2:21).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/l_S7pyTdguk

கர்த்தருடைய ஜனங்கள் ஆண்டவருக்குப் பிரயோஜனமான பாத்திரங்களாய் காணப்பட வேண்டும். சபை என்னும் பெரிய வீட்டில் அனேக விதமான பாத்திரங்களைப் போலத் தேவ ஜனங்கள் காணப்பட்டாலும், சில பாத்திரங்களே எஜமானுக்கு பிரயோஜனம் உள்ளதாய் காணப்படுவார்கள். தேவனால் உபயோகிக்கப்பட முடியாதவர்கள் என்று யாருமில்லை, உபயோகமின்றி துருப்பிடித்து அழிவதை விட, அதிகம் பயன்படுத்தப்பட்டுத்  தேய்ந்து போவதே மேலானது. ஆனால் உபயோகிக்கப்பட வேண்டுமெனில், அப்படிப்பட்டவர்கள் சுத்திகரிக்கப்பட்டவர்களும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாய் காணப்படவேண்டும். பரிசுத்தத்தை  வாஞ்சிக்கிறவர்கள்  அத்தனை பேரும் எஜமானுக்கு பிரயோஜனமாய் காணப்பட முடியும். பரிசுத்தம் என்பதற்குப் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்வது என்று அர்த்தம். உலகத்தோடு ஒன்றித்துப் போகிறவர்கள்  கர்த்தருக்குப் பிரயோஜனமாய் காணப்படமுடியாது.

பவுல், தீமோத்தேயுவுக்கு ஆலோசனையாக, எஜமானுக்கு அவன் பிரயோஜனமான பாத்திரமாய் காணப்பட, நீ பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு  விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு என்று 2 தீமோத். 2:21ல் கூறினாார். இரண்டு காரியங்களை ஆலோசனையாகக் கூறுகிறார். ஒன்று வாலிப வயதில் காணப்படுகிற இச்சைகளுக்கு அவன் விலகி ஓட வேண்டும். இந்தக் குறிப்பிட்ட காரியத்தை பவுல் கூறும் போது, தீமோத்தேயுவின் வயது நாற்பதிற்கு மேலிருக்கும் என்பதாக வேதாகம பண்டிதர்கள் கூறுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகள், ஆண் பெண் இருபாலரும், எந்த வயதை உடையவர்களாய் காணப்பட்டாலும் பாலியத்திற்குரிய இச்சைகளை விட்டு தூரமாய் ஓடி விலகுகிறவர்களாய் காணப்படுங்கள். அப்போது தான் நீங்கள் கர்த்தருக்குப் பிரயோஜனமான பாத்திரங்களாய் காணப்பட முடியும்.  இரண்டாவதாக, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே ஐக்கியம் கொள்ளுகிறவர்களாய் காணப்படுங்கள். சுத்த இருதயத்தோடு கர்த்தரைத்  தொழுதுகொள்ளுகிறவர்கள் பரிசுத்தத்திற்குரிய காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுவார்கள். கர்த்தருடைய சமூகத்தை  வாஞ்சிக்கிறவர்களாய் காணப்படுவார்கள். அவர்கள் வாயின் வார்த்தைகள் எல்லாம் வேதவார்த்தைகளாகவும், விசுவாச வார்த்தைகளாகவும், மற்றவர்களை ஊன்றக கட்டுகிற வார்த்தைகளாகவும் காணப்படும். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வேதம் கூறுகிறது, அவர்கள் வாயின் வார்த்தைகளை வைத்தே அவர்களுடைய இருதயம் சுத்தமானாதா, இல்லை அசுத்தமானதா என்பதை நீங்கள் அறியமுடியும். 

கர்த்தருடைய பிள்ளைகளே, சபையாகிய ஒரு பெரிய வீட்டில் நீங்கள் ஒரு அங்கமாகக் காணப்படுவது பெரிய பாக்கியம். அதைக்காட்டிலும் மேன்மையானது, அந்த வீட்டின் உரிமையாளருக்கு நீங்கள் பிரயோஜனமாய் காணப்படுவது. ஆகையால் எல்லா விதமான இச்சைகளுக்கும் விலகி ஓடி உங்களைப் பரிசுத்தமாய் காத்துக்கொள்ளுங்கள். அதுபோல உங்கள் ஐக்கியம் சுத்த மனதோடு கர்த்தரைச் சேவிக்கிறவர்களோடு காணப்படட்டும்.  அப்போது எஜனமானாகிய ஆண்டவருக்கு நீங்கள் கனத்திற்குரிய, பிரயோஜனமான பாத்திரங்களாய் காணப்படுவீர்கள். அவரும் உங்களைக் கனப்படுத்தி  ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *