எபே 6: 2, 3. உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/FQ7DZlPDCao
தேவன் கொடுத்த பத்து கற்பனைகளில் இந்த ஒரு கற்பனை தான் வாக்குத்தத்தோடு கொடுக்கப்பட்ட கற்பனை. ஆண்டவருடைய பார்வையில் குடும்பம் விலையேறப்பெற்றது, குடும்பங்களை அவர் அதிகமாக நேசிக்கிறார். ஆகையால் தான் இயேசு தன்னுடைய முதல் அற்புதத்தை ஒரு திருமண விழாவில் செய்தார். திருமணம் செய்தபிறகு மனைவி கணவனோடு வாழவேண்டும் என்பதற்காக பெற்றோர்களை நேசிக்காமல், அவர்கள் மேல் கரிசனைகொள்ளாமல் இருப்பது தேவனுடைய பார்வையில் உகந்தது அல்ல.
கீழ்ப்படிதலுக்கும் (Obey) கனம்பண்ணுதலுக்கும் (Honour) வேறுபாடு உண்டு. கீழ்ப்படிதல் என்பது, ஒரு காரியத்தை செய் என்றால் செய்வதும், செய்யாதே என்றால் செய்யாமல் இருப்பதும் தான் கீழ்ப்படிதல். கணம் பண்ணுதல் என்பது மரியாதை மற்றும் அன்பு செலுத்துவதாய் காணப்படுகிறது. எபே 6:1 கூறுகிறது, பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம் என்பதாக. ஒருவன் பிள்ளையாய், பெற்றோர்களுடைய கவனிப்பில் இருக்கும்போது, அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். இயேசுவும் தன்னுடைய பெற்றோருக்கு கீழ்ப்படிந்திருந்தார். அதன் பின்னர் நாம் பிள்ளைப்பருவத்தை தாண்டியவுடன், பெற்றோரை நாம் கனம் செய்ய வேண்டும். இன்றைய கிறிஸ்துவ உலகில், அநேக கிறிஸ்தவர்களும், தங்களுடைய பெற்றோர்களை கனம் பண்ணாமல், அவர்களை இகழ்ச்சியாய் நடத்துகிறதை பார்க்கமுடிகிறது. தேவ ஜனங்களே, நம்முடைய பெற்றோர்களுக்கு வயது ஆகும்போது, சில பல குறைவுகள் அவர்களுக்கு வரும். அவர்களுக்கு ஞாபக மறதி வரும், அவர்கள் தங்களுடைய காலத்தைப்போல தான் செயல்படுவார்கள், அவர்களுடைய சில புத்திமதிகள் இன்றைய வாழ்நாட்களில் ஒவ்வாததுபோல காணப்படும். எப்படி இருந்தாலும், நாம் நம்முடைய பெற்றோர்களை கனம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். தேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது யோசேப்பு தன்னுடைய தகப்பனாகிய யாக்கோபை பராமரித்தான். சிலுவையில் இயேசு தொங்கியபோதும், தன்னுடைய தாயை இயேசு கவனித்தார் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
பழைய ஏற்பாட்டின் கடைசி வசனத்தை சற்று உற்று நோக்கி பாருங்கள். மல் 4:5,6 கூறுகிறது: இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான் என்பதாக. பிதாக்கள் பிள்ளைகளைப்பற்றி குறிப்பிட்டு பழைய ஏற்பாடு முடிவடைந்துள்ளது.
யாத் 20:12 கூறுகிறது, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதாக. உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் நன்மை உண்டாகவும், வாழ்நாள் நீடித்திருக்கவும் கர்த்தர் கொடுக்கிற ஒரு திறவுகோல் இல்லையென்றால் இரகசியம் உங்கள் பெற்றோரை கனம்பண்ணுங்கள் என்பதாகும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org