மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன் (யாத். 31:5).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Inp8Ao8qz-o
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் நானூற்றுமுப்பது வருஷம் அடிமைகளாய் காணப்பட்டார்கள். அந்த வருஷங்கள் முடிந்த அன்றைய தினம் அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய் புறப்பட்டார்கள். அதன்பின்பு சுமார் நாற்பது வருஷங்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள். அந்நாட்களில் அவர்கள் நடுவில் கர்த்தர் வந்து தங்குவதற்கு ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படிக்கு மோசேக்கு கட்டளையிட்டு, அதின் மாதிரியையும், அளவுகளையும் கொடுத்தார். ஆசரிப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் பலிபீடத்தையும், வெண்கல தண்ணீர் தொட்டியையும், பரிசுத்த ஸ்தலத்தில் சமூகத்தப்பங்களை வைக்கிற மேஜையும், பொன் குத்து விளக்கையும், மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கை பெட்டியையும் இன்னும் பல பொருட்களையும் செய்வதற்குத் திறமைசாலிகள் தேவைப் பட்டார்கள். அந்த வேலைகளைச் செய்வதற்கு பெசலெயேலைப் கர்த்தர் பேர் சொல்லி அழைத்து, அவனுக்கு ஞானமும் புத்தியும் அறிவும் உண்டாகத் தேவ ஆவியினால் அவனை நிரப்பினார். அவனுடன் வேலை செய்வதற்கு அகோலியாபையும், ஞான இருதயமுள்ளவர்களையும் கர்த்தர் ஏற்படுத்தினார். மோசே, ஆரோனைப் போல கர்த்தர் இவர்களையும் பேர் சொல்லி அழைத்து, அபிஷேகித்து அவருடைய பணிக்காகத் தெரிந்து கொண்டார். பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான் என்று யாத். 37:1 கூறுகிறது. கர்த்தருடைய ஆவியானவரின் அபிஷேகம் அவர்களைத் திறமைசாலிகளாய் மாற்றி சகலவித சித்திர வேலைகளையும், விநோதமான வேலைகளை யோசித்துச் செய்யும்படிக்குச் செய்தது.
கர்த்தருடைய பிள்ளைகள் திறமைசாலிகளாய் காணப்பட வேண்டும். உலக வேலைகளையும், கர்த்தருடைய வேலைகளையும் திறம்படச் செய்கிறவர்களாய் நீங்கள் காணப்பட வேண்டும், அதற்கு ஆவியானவருடைய அபிஷேகம் உங்களுக்குத் தேவை. அவருடைய அபிஷேகம் சகலவற்றைக் குறித்து உங்களுக்குப் போதிக்கும் என்று வேதம் கூறுகிறது. அதுபோல உங்களுக்குள் பலவிதமான தாலந்துகள் மறைந்து காணப்படலாம். அவற்றைக் கண்டுபிடித்து கர்த்தருக்காக பயன்படுத்துங்கள். மோசே தரிசனங்களையும், மாதிரியையும் கர்த்தரிடத்திலிருந்து பெறலாம், ஆனால் அதைத் திறம்படச் செயல்படுத்துவதற்கு பெசலெயேல், அகோலியாபைப் போன்ற ஆட்கள் கட்டாயம் தேவை. கர்த்தர் உங்களை அப்படிப்பட்ட மேலான பணிக்குப் பயன்படுத்துவார். உங்கள் தாலந்துகளை ஒருநாளும் புதைத்து வைக்கிறவர்களாய் காணப்படாதிருங்கள். உங்களுக்குத் தெரிந்த காரியங்களை பெசலெயேல், அகோலியாபைப் போல மற்றவர்களுக்கும் நீங்கள் கற்றுக் கொடுக்கிறவர்களாயும் காணப்படுங்கள். அப்போது தான் தேவனுடைய பணியைத் துரிதமாகவும் வேகமாகவும் நிறைவேற்ற முடியும். உலக நிறுவனங்களில், வேலைக்கு ஆட்கள் வேண்டாம் என்ற விளம்பரங்களை வைப்பார்கள். ஆனால், தேவனுடைய ராஜ்யத்தின் பணிக்கு மட்டும் ஆட்கள் எப்போதும் தேவை. ஆகையால் கர்த்தருடைய கனமான பணிக்கு உங்களை அர்ப்பணியுங்கள். அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மேன்மைப் படுத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae