தொடங்கியவர் முடிப்பார் (He who begun will perfect and complete).

பிலி 1:5,6 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/qYkJxtgSdmk

நம்முடைய ஆண்டவர் எந்தவொரு காரியத்தையும் அரைகுறையாக செய்பவரோ, இல்லையென்றால் பாதியிலே விட்டுவிடுகிறவரோ அல்ல. அரசாங்கம் வேண்டுமானால் சில நலத்திட்டங்களை செய்கிறோம் என்று சொல்லி அடிக்கல் நாட்டிவிட்டு மறந்துபோகலாம். ஆனால், நம் ஆண்டவர் நம்மில் தொடங்கியதை, அவரே செய்து முடிப்பார். எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள் என்று மாற்கு 7:37 கூறுகிறது. இயேசு எல்லாவற்றையும் நன்றாய் செய்கிறவர், நேர்த்தியாய் செய்கிறவர். உங்கள் வாழ்க்கையிலும் இயேசு அவர் சித்தத்தை நன்றாய் செய்வார், தொடங்கிய நற்காரியத்தை செய்து முடிப்பார்.

அடுத்த அதிகாரம் மாற்கு 8ல் ஒரு குருடனை சொஸ்தமாக்கிய சம்பவம் எழுதப்பட்டிருக்கிறது. இயேசு பெத்சாயிதா என்ற ஊருக்கு வந்தார். அங்கே ஒரு குருடனை இயேசுவினிடத்தில் அழைத்துவந்து அவனை தொடும்படி இயேசுவிடம் கூறினார்கள். இயேசு அவன் கண்களில் உமிழ்ந்து, அவருடைய கரங்களை வைத்தார். பின்பு, நீ ஏதாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் இயேசுவுக்கு பிரதியுத்திரமாக, நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். இப்பொழுது இந்த குருடன் பாதி குணமடைந்துவிட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை நடந்தால், பாதி குணமானவுடன் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். வீட்டில் போய் நான் எழுதிக்கொடுக்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுங்கள், இன்னும் ஒரு வாரமோ இல்லை ஒரு மாதத்திலோ இந்த வேதனை சரியாகிவிடும் என்று மருத்துவமனையில் சொல்லுவார்கள். அதுமாதிரி, பாதி சொஸ்தமான அந்த குருடனை நீ போய் வீட்டில் தரித்திரு, இன்னும் கொஞ்ச நாட்கள் கழித்து நீ முழுவதும் சுகமடைந்துவிடுவாய் என்று இயேசு சொல்லவில்லை. அந்நேரமே, மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான். அந்த குருடனுக்கு நற்கிரியை ஆரம்பித்தவர், அவரே முற்றுமுடிய குணப்படுத்தி, துவங்கிய வேலையை செய்து முடித்தார்.

ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும், முடிவு சம்பூரணமாய் இருக்கும். எத்தனையோ சக்திகள் உங்களுக்கு விரோதமாக செயல்படலாம். இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? (ரோமா 8:31). தேவனுடைய திட்டங்கள் உங்கள் வாழ்க்கையில் செயல்படுவதை தடுக்க ஒரு பொல்லாங்கனுக்கும், சாத்தானின் கிரியைகளுக்கும் அதிகாரமில்லை. காரணம், ஆண்டவர் உங்களை முன் குறித்திருக்கிறார்; உங்களை அழைத்தும் அறிந்துமிருக்கிறார். ஆகையால், உங்கள் வாழ்வில் ஆண்டவர் என்னென்ன நற்காரியங்களை தொடங்கினாரோ, அவரே செய்து முடிப்பார். இதை அப்படியே நம்புங்கள், விசுவாசியுங்கள். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் காரியம், நீங்கள் முயற்சி செய்யும் காரியம், கைகூடி வரும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *