பாரத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (Delegate the Task).

நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்,  இது உமக்கு மிகவும் பாரமான காரியம், நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது (யாத். 18:18).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CSN300-fNnw

இருபது லட்சத்திற்கு மேற்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள்  வனாந்தரத்தில்  காணப்பட்ட வேளையில், மோசே ஜனங்களுடைய நியாயத்தை அனுதினமும் விசாரித்து வந்தான். ஜனங்கள் காலமே துவங்கிச் சாயங்காலம்மட்டும்  மோசேக்கு முன்பாக வந்து நிற்பார்கள். ஆகையால் மோசே மிகவும் சோர்ந்து போனான். ஒரு நாள் மோசேயை விசாரிக்குப்படிக்கு, அவனுடைய மனைவியாகிய சிப்போராளின் தகப்பனாகிய எத்திரோ அங்கே கடந்து வந்தான். அவன் அங்கே நடக்கிற காரியங்களைக்   கவனித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்று மோசேயிடம் விசாரித்தான். மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள் என்றான். அதற்கு எத்திரோ, இது உமக்கு மிகவும் பாரமான காரியம், நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது. என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும், உம்மோடு தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம் பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும்,  பத்துபேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.  அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும், இப்படி அவர்கள் உம்மோடே கூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும் என்றான். அந்த ஆலோசனை மோசேக்கு நல்லதாய் காணப்பட்டது. ஆகையால் அதற்குக் கீழ்ப்படிந்து, அதைச் செய்கிறவனாய் காணப்பட்டான். அவனுடைய பணியும் எளிதாய் மாறினது.

ஆதிசபையின் நாட்களில் கிரேக்க ஸ்திரீகள் பந்தி விசாரணையில் விசாரிக்கப் படவில்லை என்று எபிரேயர்களுக்கு விரோதமாய் முறுமுறுப்பு  உண்டானது. அப்பொழுது இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களும், பரிசுத்தாவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரைத்   தெரிந்துகொண்டு,  அவர்களைப் பந்தி விசாரணைக்காய் ஏற்படுத்தினார்கள். நாங்கள் ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம், நீங்கள் இந்த வேலையைச் செய்யுங்கள் என்று அவர்களோடு தங்கள் பாரத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். முறுமுறுப்பும் நின்று போனது. 

கர்த்தருடைய பிள்ளைகள், உங்கள் வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்யும் போது வீணனான மன அழுத்தங்களையும் பதற்றங்களையும் குறைக்க முடியும்.  சில வேளைகளில் நாம் யோசிப்பது உண்டு, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்துப் பகிர்ந்து கொள்ளும்போது என்னுடைய வேலைக்கே பிரச்சினை வந்து விடும் என்பதாக. நன்றியறியாத கலி உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆகையால்  நீங்கள் தேவ ஞானத்தோடு, சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு காரியங்களைச் செய்யுங்கள், கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வார். ஊழியமும் ஒரு சுகமான பாரமாய் காணப்படுகிறது. அனேக ஊழியர்கள் ஒருவராகவே  பாரத்தைச் சுமப்பார்கள். அதற்குக் காரணம், சில நபர்களால் பாதிக்கப்பட்டவர்களாய் கூட காணப்படக்கூடும். அவர்கள் வளர்த்தி விட்டவர்களே, பின்னாட்களில் சபைகளைப் பிரித்து, தனியாக இவர்கள் அருகிலேயே இன்னொரு ஊழியத்தைச் செய்து, எதிரிகளாய் கூட செயல்பட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட சம்பங்கள் நம்முடைய தேசங்களில் அதிகமாய் நடக்கிறது. உங்கள் ஊழியப் பாரங்களைப் பகிர்ந்து  கொள்ளத் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும், பொருளாசையை வெறுக்கிறவர்களும், திறமையுள்ளவர்களும்,  பரிசுத்தாவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற நபர்களைத்  தெரிந்து கொள்ளுங்கள். ஒருவராய் பாரத்தைச் சுமந்து, சோர்ந்து போய்,  பாதி வயதில் மரிப்பதைப் பார்க்கிலும், மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு நீடிய ஆயுள் உள்ளவர்களாய் வாழ்ந்து, அனேகருக்கு  ஆசீர்வாதமாகக் காணப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *