மாதிரி (Pattern).

மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு(யாத்.25:40).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DYzUI_ShQuo

பரலோகத்தின் தேவன் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியைக் குறித்தும் நோக்கத்தையும் திட்டத்தையும் வைத்திருக்கிறார். உங்கள் பிறப்பைக் குறித்து முன்னறிந்திருக்கிறார். கர்த்தர் ஜனங்களைப்  பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத்  தொகையிடுவார் என்று சங்.87:6 கூறுகிறது. உங்கள் படிப்பு, வேலை, திருமணம், பிள்ளைகள் என்று எல்லாவற்றையும் முன்குறித்து திட்டத்தை வைத்திருக்கிறார். அனேக வேளைகளில் மனுஷர்கள் தேவ திட்டத்திலிருந்து விலகி, தங்களுடைய விருப்பத்தின்படி வாழ்கிறார்களே ஒழியக் கர்த்தர் உங்களைக் குறித்துக் கொண்ட நினைவுகளும் எண்ணங்களும் மேலானது. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும் படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே என்று எரே.29:11 கூறுகிறது.

இஸ்ரவேல் ஜனங்கள் நடுவில் வந்து வாசம் பண்ண ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்ட கர்த்தர் சித்தம் கொண்டார். அதின் மாதிரியையும், அதில் காணப்படுகிற பணிமுட்டுகளின்  மாதிரியையும்  சீனாய் மலையில் வைத்து மோசேக்கு கொடுத்தார். தேவன் திரும்பத் திரும்ப அந்த மாதிரியின் படி ஆசரிப்புக் கூடாரத்தைக்  கட்டுபடிக்கு மோசேயை அறிவுறுத்தினார்(யாத். 25:9,40,27:8). மோசே கீழ்ப்படிந்து அப்படியே செய்தான், தேவ மகிமை கூடாரத்தை நிரப்பினது. நோவாவிடம் பேழையைக் கட்டுபடிக்குக் கூறி, அதின் மாதிரியைக் கர்த்தர் கற்றுக் கொடுத்தார். அவனும்  அதன்படி  செய்ததினால் வெள்ளம் வந்த வேளையில், வெள்ளம் உயர உயர, பேழையும் அதின் மேல் உயர்ந்தது. நோவாவும் அவன் குடும்பமும், அனேக உயிரினங்களும் பாதுகாக்கப்பட்டார்கள். தேவாலயத்தைக் கட்ட தாவீதிற்கு கர்த்தர் மாதிரியைக் கொடுத்தார். அந்த மாதிரியின் படி சாலொமோன் ஆலயத்தைக் கட்டினான். ஆகையால் பிரதிஷ்டையின் வேளையில் தேவ மகிமை ஆலயத்தை நிரப்பினது.


கர்த்தருடைய பிள்ளைகளே, பூமிக்குரிய உங்கள் ஜீவியத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கர்த்தர் விருப்பமும் வாஞ்சையும் உடையவராய் காணப்படுகிறார். குறிப்பிட்ட காரியங்களில் மாத்திரமல்ல, எல்லா காரியங்களிலும் அவருடைய சித்தத்தை நீங்கள் செய்யவேண்டும் என்று விரும்புகிறார். உங்களைக் குறித்தும், உங்கள் காரியங்களைக் குறித்தும் கர்த்தருடைய திட்டம் என்ன என்பதை அறிந்து கொண்டு அதன்படி  காரியங்களை நடப்பியுங்கள். உலகமும், குடும்பத்தினரும்,  சுற்றிக்  காணப்படுகிறவர்கள் காட்டுகிற  மாதிரியைப் பின்பற்றாமல், பரலோக மாதிரியையும் நோக்கத்தையும் பின்பற்றுங்கள். ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் கூட தங்கள் நோக்கத்தை நிறைவேற்றத்  தேவனைத்  துணைக்கு அழைக்கிறார்களே ஒழிய, பரலோக தேவனுடைய நோக்கத்தை முன்னறிந்து, அதை நிறைவேற்ற விருப்பமில்லாதவர்களாய் காணப்படுகிறார்கள்.  பிள்ளைகளுடைய படிப்பு, வேலை, திருமணம் என்று வரும் போது, தங்கள் விருப்பங்களைத் தான் நிறைவேற்றுகிறார்கள். அதற்குக் காரணம், தேவன் தவறு செய்து விடுவார் என்றும், அவருடைய சித்தம் ஆசீர்வாதமாய் காணப்படாது என்றும்   எண்ணுவதினால் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஊழியம் கூட பரலோக மாதிரியின் படிதான் காணப்பட வேண்டும். இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது என்று எபி. 8:5ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் பரலோக மாதிரியைப் பின்பற்றி, ஆசீர்வாதமாய் காணப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *