உடன்படிக்கையின் வார்த்தைகளைக்  கைக்கொள்ளுங்கள் (Keep the words of the Covenant).

இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக(உபா. 29:9).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/ntTRIx8JBOU

ஒரு புதிய வருஷத்தின் முதல் மாதத்தை முடித்து இரண்டாவது மாதத்தில் பிரவேசிக்கும்படிக்கு கிருபை பாராட்டின தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம்.

மோசேயின் கடைசி நாட்களில், ஓரேப் பர்வதத்தில் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களோடு பேசின உடன்படிக்கையின் வார்த்தைகளை மீண்டும் நினைப்பூட்டுகிறான். அதற்குக் காரணம், நாற்பது வருட  வனாந்தர பயணத்தில் உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேட்ட இருபது வயதிற்கு மேற்பட்டவர்கள் எல்லாம் ஏற்கனவே  மரித்துப் போய்விட்டார்கள். அவர்கள் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாரக்கண்டார்கள். அவர்கள் வஸ்திரங்கள் பழையதாகிப் போகவில்லை. அவர்கள் பாதரட்சைகள் தேய்ந்து போகவில்லை. அவர்களில் பலவீனப்பட்டவர்கள் ஒருவரும் காணப்படவில்லை. அவர்களுக்கு வானத்து மன்னாவையும், காடைகளையும், தண்ணீரையும் திரளாய் கர்த்தர் கொடுத்தார். இப்பொழுது அவர்களுடைய சந்ததிகளுக்கு அவன் மீண்டும் கர்த்தருடைய வார்த்தைகளை நினைப்பூட்டுகிறான். நீங்கள் இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை கைக்கொண்டு, அவைகளின்படி செய்யும் போது கர்த்தர் உங்கள் தேவைகளைச் சந்திப்பார், நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் என்று கர்த்தர் வாக்குக் கொடுத்தார். 

வேதவார்த்தைக்கு இன்னொரு பெயர் உடன்படிக்கையின் வார்த்தை என்பதாகக் காணப்படுகிறது. உடன்படிக்கை என்பது இரண்டு பேர், அல்லது இரண்டு கூட்ட ஜனங்கள்,  ஒருவருக்கொருவர் கொடுக்கிற வாக்குறுதியாய் காணப்படுகிறது.  கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்ற வாக்குறுதியைக் கொடுக்கும் போது, கர்த்தர் நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இதைத்தான், சங்கீதம் 1ல், துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான், அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்று எழுதப்பட்டிருக்கிறது. 

கர்த்தருடைய பிள்ளைகளே, சுமார் மூவாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு மோசேயின் மூலம் கர்த்தர் கொடுத்த உடன்படிக்கையின் வார்த்தைகள் நமக்குரியதாயும் காணப்படுகிறது. இந்த வார்த்தைகள் கர்த்தர் நம்மோடு செய்த உடன்படிக்கையாயும் காணப்படுகிறது.  ஆகையால் நீங்கள் இந்த புதிய மாதத்தில் இந்த வார்த்தைகளைக் கைக்கொண்டு, அதின்படிச் செய்யும் போது, உங்கள் வழிகள் வாய்க்கும், நீங்கள் எடுக்கிற முயற்சிகளைக் கர்த்தர் கைகூடி வரப்பண்ணுவார், உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும், அடைபட்டுப் போன வாசல்கள் உங்களுக்காகத் திறக்கும். நீங்கள் வாழ்ந்து, சுகமாய் காணப்படுவீர்கள்.  

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *