கிருபையில் பலப்படு (Be strong in the grace).

2 தீமோ 2:1 ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8RfhdB8H6gs

அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய விசுவாசத்தில் உத்தம குமாரனுக்கு நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு என்ற ஆலோசனையை கொடுக்கிறான். எபேசு சபைக்கு பவுல் எழுதும்போது கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் (எபே 6:10) என்பதாக கூறுவான். நாம் எல்லாரும் கோழைகளாக, பலம் குன்றியவர்களாக, பயந்த சுபாவம் உள்ளவர்களாக அழைக்கப்பட்டவர்களல்ல. நாம் ஒவ்வொருவருவரும் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே கர்த்தர் எதிர்பார்க்கிறார். கிதியோன், தான் சிறியவன் என்று தன்னை எண்ணிக்கொண்டிருக்கையில், ஆண்டவர் அவனை பார்த்து பராக்கிரமசாலி என்று அழைத்தார். ஆகையால், இருதயத்தில் நாம் பலமுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.

இந்நாட்களில் வெற்றியுள்ள கிறிஸ்தவர்களை விட, தோல்வியுள்ள கிறிஸ்தவர்களே அதிகம். பாவத்தை மேற்கொள்ளுவதில் தோல்வி, சாத்தானை எதிர்கொள்ளுவதில் தோல்வி, ஆண்டவர் அழைத்த அழைப்பில் தோல்வி என்று அநேகர் தோல்வியை சந்திக்கிறார்கள். தனி வாழ்வில் தோல்விகள், குடும்ப வாழ்வில் தோல்விகள், பொது வாழ்வில் தோல்விகள், ஊழிய பாதையில் தோல்விகள் என்று தோல்விகளின் மேல் தோல்விகளில் இருக்கும் கிறிஸ்தவர்கள் அநேகர். தோல்வி ஏன் வருகிறது ? காரணம் பலம் குறைவு. நாம் நம்மை இவற்றில் எப்படி பலப்படுத்திக்கொள்ளுவது? பவுல் தீமோத்தேயுவிற்கு சொல்லுகிறான் நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு என்பதாக. தேவ கிருபையில் நாம் நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நியாயப்பிரமானத்திலிருந்து விடுதலை கிடைத்தது, வாகனம் ஓட்டுவதற்கு அரசாங்கத்தில் உரிமம் (License) வாங்குவதை போல, பாவம் செய்வதற்கு நமக்கு கிடைத்த உரிமம் என்று நினைத்துவிடக்கூடாது. அது பரிசுத்தமாய் வாழ கிடைத்த விடுதலை என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். நம்மேல் இருக்கும் தேவ கிருபை பாவத்தை மேற்கொள்ளும்படி உதவி செய்யும். பாவத்தில் நான் தோற்றுப்போகிறேன், மீண்டும் மீண்டும் அறிக்கையிட்ட பாவத்தை செய்கிறேன், என்னால் இவற்றிலிருந்து விடுபட முடியவில்லை என்று மனம் தொய்ந்து போய் இருப்பீர்களென்றால், நீங்கள் கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படுங்கள். பவுல், 1 கொரி 15:10ல் சொல்லுகிறான், ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது என்பதாக. பவுல் பெற்றுக்கொண்ட அந்த கிருபையில்தான், தன்னுடைய உத்தம குமாரன் பலபட வேண்டும் என்று புத்தி சொல்லுகிறான். நீங்களும் நானும் இதே புத்திமதிகளை ஏற்றுக்கொண்டு கர்த்தருடைய கிருபையில் பலப்பட வேண்டும். நமக்கு கிருபை வேண்டுமென்றால் தாழ்மை வேண்டும், எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். மாத்திரமல்ல, நமக்கு கிருபை வேண்டுமென்றால் உலகம் மற்றும் பொருட்களின் மீது இருக்கிற பைத்தியம் நீங்க வேண்டும். அப்போஸ்தலர்களுடைய ஆசீர்வாதத்தில் முதலாவது வருவது கிருபை, அடுத்து அன்பு, அதற்கடுத்து ஐக்கியம் (2 கொரி 13:14). ஆகையால் நாம் கிருபையில் அதிகமாக பலப்பட வேண்டும். கிருபை இருந்தால் எதையும் சாதிக்கலாம்; இதற்கு செருபாபேல் மிக சிறந்த உதாரணம். சக 4:7 கூறுகிறது, பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார் என்பதாக. உங்கள் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய கிருபையில் பலப்பட்டு, அவர் கிருபையை சார்ந்துகொள்ளுங்கள். அந்த கிருபை, உங்கள் தோல்விகளை ஜெயமாக மாற்றும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *