ஆரோக்கியமான உபதேசத்தை கேளுங்கள் (Listen to Sound Doctrine).

தீத்து 2:1. நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/icAWbkXxASg

இன்றைக்கு உலகளாவிய சபையில் மலிந்தும் மெலிந்தும் காணப்படுவது ஆரோக்கியமான உபதேசம். தேசத்தின் தலைவர் வேதத்தின்படி ஆண்புணர்ச்சி மற்றும் பெண்புணர்ச்சி வேண்டாம் என்று சட்டம் இயற்றும்போது, சபையில் இருக்கும் தலைவர்கள் அவர்களையும் மதிக்க வேண்டும் என்று சொல்லும் பொல்லாத காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சோதோம் கொமொரோ பட்டணம் ஆண்புணர்ச்சியால் நிறைந்துகிடந்தது; அப்பொழுது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்பட்டது. இன்றோ இப்படிப்பட்ட பாவங்கள் ஒரு வகையான நாகரீகம் என்று சொல்லும் அளவிற்கு சமுதாயமும் சபையும் சென்று கொண்டிருக்கிறது. சபையின் போதகர்கள் இவ்வுலக வாழ்விற்கு அடுத்த காரியங்களையே ஜனங்களுக்கு போதித்து, அவர்களை வஞ்சிக்கிறவர்களாக காணப்படுகிறார்கள். நித்தியத்தை குறித்து ஜனங்களுக்கு எடுத்து போதிப்பதில் சபை பின்வாங்கிப்போனது. நித்திய அக்கினி, நித்திய நியாயத்தீர்ப்பு, நித்திய உடன்படிக்கை, நித்திய ராஜ்ஜியம், நித்திய மீட்பு, போன்ற நித்தியத்துக்கடுத்த காரியங்களை பேச சபை தலைவர்களுக்கு விருப்பமில்லை, சபை விசுவாசிகளுக்கும் செவிகள் மங்கிப்போய்விட்டது. பரிசுத்தம், ஆத்தும ஆதாயம், ஆவிக்குரிய வாழ்வு, தாழ்மை, கீழ்ப்படிதல் போன்ற காரியங்களை குறித்து கேட்க விசுவாசிகளுக்கு விருப்பமில்லை.

வசப்பு மொழிகளும், கட்டுக்கதைகளும், தன்னுடைய அனுபவங்களை மாத்திரமே சொல்லி, சபையை நித்தியத்திற்கு நேராக நடத்தாமல் அநேக ஓநாய்கள் பக்கவாட்டில் நுழைந்திருக்கிறார்கள். ஆராதனை என்ற பெயரில் கூத்தாடிகளும், ஊழியக்காரன் என்ற பெயரில் சினிமா நட்சத்திரத்தை போலவும், உபதேசம் என்ற பெயரில் உசுப்பேத்திவிடும் வார்த்தைகளை பேசும் பொல்லாத ஊழியக்காரர்கள் ஆட்டு தோலை போர்த்திக்கொண்டு சபைக்குள் வந்திருக்கிறார்கள். தங்களை போதகர்கள் என்று அழைத்துக்கொள்ளுகிறவர்கள் அநேகர் விண்ணிலிருக்கும் இயேசுவை ஜனங்களுக்கு காட்டாமல், மண்ணிலிருக்கும் தன்னையே ஜனங்களுக்கு காட்டுகிறார்கள். இவைகளை புரிந்துகொள்ளாமல் பல வருடம் கிறிஸ்தவர்களாக இருக்கும் விசுவாசிகளே தடுமாறி போகிறார்கள். பரத்தை காட்டாமல், பணத்தை காட்டும் ஊழியர்கள், தங்கள் வயிற்று பிழைப்பிற்காக தேவனை காண்பிக்கும் ஊழியர்களை இனம் கொள்ள வேண்டும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு தேவையானதை போதியாமல், மக்கள் விரும்புவதை போதிக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். தங்களை அடையாளபடுத்திக்கொள்ள நினைக்கும், பிரபலமாக விரும்ப நினைக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாய் இருங்கள். வார்த்தையை புரட்டுகிறவர்கள், எப்படியும் வாழலாம் என்று சொல்லும் ஊழியர்கள் கள்ள போதகர்கள்.

நமக்கு அங்கும் இங்குமாக ஒரு சில வசனங்கள் மாத்திரம் தெரிந்தால் போதாது. நாமெல்லாருக்கும் வேதத்தில் இருக்கும் ஒவ்வொருவசனமும் தெரிய வேண்டும். இவை தெரியாததினால் தான் ஜனங்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். பவுல், மூப்பர்களை கிருபையின் வசனத்திற்குள் ஒப்புக்கொடுத்தான் (அப் 20:32). நமக்கு வேறொரு இயேசு, வேறொரு சுவிசேஷம், வேறொரு பிரசங்கம் இல்லை. பவுல் சொன்னான் எங்களையல்ல கிறிஸ்துவையே பிரசங்கிக்கிறோம் என்பதாக. அவனுடைய இலக்கு எப்பொழுதும் சிலுவையிலறையட்ட இயேசுவை பிரசங்கிக்க வேண்டும் என்பதே. ஆகையால் எப்போதும் நாம் ஆரோக்கியமான உபதேசத்திற்கே செவிசாய்க்கிறவர்களாக காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *