தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது (1 தீமோத். 2:5,6).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2JRFF3mPdMw
மத்தியஸ்தர் என்பது எதிரிடையாய் காணப்படுகிற இரண்டு நபர்களுக்கு நடுவில் ஒப்புரவாகுதலைக் கொண்டு வருவதற்கு, இரண்டு பேரிடத்திலும் நட்பு பாராட்டி, இருவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நபர் எடுக்கிற முயற்சி என்பது அந்த வார்த்தையின் அர்த்தமாகும். பிரச்சனைக்குரியவர்கள் தனி நபர்களாயும், இரு கூட்ட ஜனங்களாயும், அல்லது இரு தேசங்களாய் கூட காணப்படலாம்.
நாம் ஆராதிக்கிற தேவன் மகா பரிசுத்தர், அவர் தீமையைப் பாராத சுத்தக் கண்ணன். அவரால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்களோ, பாவத்தில் பிறந்து, பாவ உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய பாவங்கள் தேவனுடைய முகத்தை நமக்கு மறைக்கிறது. அவரோடு காணப்படுகிற ஐக்கியத்தை இழக்கும் படிக்குச் செய்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் சரீர மரணத்தையும், ஆவிக்குரிய மரணத்தையும், நித்திய மரணத்தையும் கொண்டு வருகிறது. பழைய ஏற்பாட்டின் நாட்களில் மோசே, தேவனுக்கும் ஜனங்களுக்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்கிறவனாய் நின்றான். ஜனங்கள் பொன் கன்றுக்குட்டியை உருவாக்கி, நம்மை எகிப்திலிருந்து நடத்திக் கொண்டு வந்த தெய்வங்கள் இவைகளே என்று சொல்லி, கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்த வேளையில், தேவன் அவர்களை அழிக்கச் சித்தம் கொண்டார். அந்த வேளையில் மோசே தேவனுக்கும் ஜனங்களுக்கும் நடுவில் நின்று பரிந்து பேசினான். கோராகும் அவன் கூட்டத்தாரின் பாவத்தின் நிமித்தம் வாதை பாளயத்தில் வந்த வேளையில், பிரதான ஆசாரியனாகிய ஆரோன், தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே மத்தியஸ்தம் செய்கிறவனாய் நின்றான், அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
புதிய உடன்படிக்கையில், இயேசு நம்முடைய மத்தியஸ்தராய் காணப்படுகிறார். இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார் என்று எபி. 8:6ல் எழுதப்பட்டிருக்கிறது. மோசே, ஆரோன் அவர்கள் எல்லாரும் நம்மைப் போலக் குறைவுள்ள மனுஷர்கள், ஆனால் இயேசு ஒருவரே பாவமறியாதவர், குற்றமில்லாதவர், மாசற்றவர், பழுதற்றவர். பரிசுத்த தேவனுக்கும், பாவ மனுகுலத்திற்கும் நடுவே நின்று மத்தியஸ்தம் செய்வதற்குத் தகுதியானவர். வேறொரு நபர்கள் இனி நமக்குத் தேவையில்லை, மனிதனால் நியமிக்கப்பட்ட எந்த புனிதர்களுக்கும் அதற்குரிய தகுதிகளும் இல்லை. இயேசு நமக்காகப் பிதாவின் வலது பாரிசத்திலிருந்து இன்றைக்கும் பரிந்து பேசி, மத்தியஸ்தம் செய்கிறவராகக் காணப்படுவதினால் தான், நம்முடைய மீறுதல்களுக்குரிய தண்டனையை உடனே பெறாமல், பிதாவாகிய தேவனிடத்திலிருந்து இரக்கத்தைப் பெற்று உயிரோடு காணப்படுகிறோம். ஆகையால் தொடர்ந்து பாவங்கள் செய்யாதபடி பரிசுத்தமாய் ஜீவிக்க நம்மை அர்ப்பணிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae