உதவிசெய்ய வல்லவர் (He is wonderfully able to help).

எபி 2:18. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/nM-4yEz059c

நம்முடைய ஆண்டவர் வல்லவர், சர்வ வல்லவர், வல்லமையுள்ளவர் என்று வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. வல்லவர் என்றால் மிகுந்த சக்தி வாய்ந்தவர் என்றும் சொல்லலாம். உலகத்தில் சக்திவாய்ந்தவர்களின் பட்டியலை Forbes என்ற இதழ் வருடந்தோறும் வெளியிடும். இந்த சக்திகளைக்காட்டிலும், ஒருவரும் கிரகிக்கமுடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தவர், வல்லமையுள்ளவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து.

யோவான் ஸ்நானகன் சொன்னான், என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார் (மாற் 1:7) என்பதாக. ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள் என்று மத் 10:28 கூறுகிறது. அவர் வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவர் என்று ரோம 4 :21 கூறுகிறது. ஆண்டவர் எவரையும் நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறார் என்று ரோம 14:4 கூறுகிறது. உங்களை ஸ்திரப்படுத்த வல்லவர் என்று ரோம 16:26 கூறுகிறது. அதுபோலத்தான், உலகத்திலிருக்கும் யாராலும் உங்களுக்கு உதவி செய்யமுடியாத சூழ்நிலையிலும், உங்களுக்கு உதவி செய்ய வல்லமையுள்ளவர் ஒருவர் இருக்கிறார். அவர் உங்கள் இரட்சகராகிய, மணவாளனாகிய, இராஜாதி இராஜாவாகிய இயேசுகிறிஸ்து. அவரால் உதவி செய்யமுடியாத காரியம் என்று இந்த உலகத்தில் ஒன்றுமில்லை. இயேசுவின் சக்திக்கு மிஞ்சியது இந்த அண்ட சராசரத்திலும் ஒன்றுமில்லை. அவர் தன்னுடைய கரத்தை நீட்டி உங்களுக்கு உதவி செய்வார். உங்களுக்கு ஒத்தாசை வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து வரும். 100 வயதான ஆபிரகாம் பிள்ளை பெறும்படி உதவி செய்தது அவருடைய வல்லமை. இயேசுவின் வல்லமையை ஒருநாளும் மட்டுப்படுத்த முடியாது. வழியே இல்லாத இடங்களில் புதிய வழியை உண்டு பண்ண அவர் வல்லமையுள்ளவர்.

சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான் (1 சாமு 7:12). உங்கள் வாழ்க்கையில் இது வரைக்கும் பார்த்திராத உதவி செய்யும் கர்த்தருடைய கரத்தை பார்க்கப்போகிறீர்கள், அவர் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் எபெனேசராக இருக்க போகிறார். ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம் (2 நாளா 14:11) என்று கூறினான். உங்களுக்கும் எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் உங்களுக்கு உதவி செய்வது ஆண்டவருக்கு கடினமானதல்ல; அவருக்கு அவைகள் லேசான காரியம். காரணம் இயேசு இக்கட்டில் உதவி செய்ய வல்லமையுள்ளவர்.

அவருடைய உதவிக்காக கர்த்தரை நோக்கி பாருங்கள். நமக்கு உதவி செய்யும்படியாக அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டார். உங்களுக்கு வரும் சோதனைகள், அவமானங்கள், நிந்தைகள், அழுகைகள், துக்கங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர். அப்படிப்பட்ட இயேசு சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். குழியில் கிடந்த யோசேப்பிற்கு ஆண்டவர் உதவி செய்தார். காட்டிலிருந்த தாவீதுக்கு ஆண்டவர் உதவி செய்தார். சிங்க கெபியிலிருந்த தானியேலுக்கு ஆண்டவர் உதவி செய்தார், யோபுவுக்கு உதவி செய்தார், ஆபிரகாமுக்கு உதவி செய்தார், ஈசாக்குக்கு உதவி செய்தார், யாக்கோபுக்கு உதவி செய்தார், உங்களுக்கும் உதவி செய்ய அவர் வல்லமையுள்ளவராய் இருக்கிறார். எபெனேசரை சந்திக்க ஆயத்தமாயிருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *