இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப்பார்ப்பீர்களாக (எண். 1:3).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hJlUH-wPbig
உலக நிறுவனங்களில் ஆண்டு தோறும் வருட முடிவில் கையிருப்பு பொருட்களின் தொகைகளை எண்ணிக் கணக்கிடுவார்கள், அதுபோல வரவு செலவு தணிக்கைகளையும் ஆண்டு தோறும் செய்வார்கள். அது அந்த நிறுவனங்களின் வலிமை மற்றும் பலவீனங்களை அறிந்து கொண்டு, குறைவுகளை சரிசெய்வதற்கு உதவியாயிருக்கும். தேவன், மோசேயையும், ஆரோனையும் நோக்கி, இஸ்ரவேல் சபையில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்கு புறப்படத்தக்கவர்களை அவர்கள் கோத்திரங்களின்படி எண்ணிப் பார்க்கும் படிக்குக் கூறினார். இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முப்பத்தியொரு ராஜாக்களும், ஏழு ஜாதிகளும் காணப்பட்டார்கள், அவர்களை வென்றால்தான் கானானைச் சுதந்தரித்து இஸ்ரவேல் ஜனங்களுக்காகப் பங்கிடமுடியும். அவர்களுடைய பலத்தையும் பலவீனத்தையும் அவர்கள் அறிந்து கொள்ளும் போது தான், அதற்கேற்ற விதத்தில் தங்களைத் தயார் செய்து கொண்டு எதிரிகளுக்கு எதிராய் யுத்தத்திற்குச் சென்று வெற்றி பெறமுடியும். தேவ ஜனங்கள் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது, மிகைப்படுத்தவும் கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். யோசுவா வேவுக்காரர்களின் சொல்லைக் கேட்டு, ஆய் பட்டணத்தின் குடிகளைக் குறைத்து மதிப்பிட்டு, ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேரை யுத்தத்திற்கு அனுப்பி, தோல்வியைச் சந்தித்தான். பின்பு கர்த்தருடைய ஆலோசனையைக் கேட்டு யுத்த புருஷர்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு ஆயிபட்டணத்தின்மேல் யுத்தத்திற்குப் போய், தேசத்தை எளிதாய் சுதந்தரித்தான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, இஸ்ரவேல் ஜனங்களைப் போல நம்முடைய யுத்தம் உலகத்தின் ஜனங்களோடு இல்லை. நாம் ஆவிக்குரிய யுத்த களத்தில் காணப்படுகிறோம். துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்று வேதம் கூறுகிறது. எதிரியைப் பலவான் என்றும் வேதம் அழைக்கிறது. அவன் மகா தந்திரசாலி, வஞ்சிக்கிறவன், மோசம் போக்குகிறவன், வேடன். அவனை மதிப்பீடு செய்யும் போது, நம்முடைய ஆவிக்குரிய நிலைமையை நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். எதிரியை எதிர்கொள்ளுவதற்குரிய பரிசுத்தம் நமக்குள் காணப்படுகிறதா, நம்முடைய போராயுதங்கள் என்ன என்பதை அறிந்திருக்கிறோமா?. ஆட்டுக்குட்டியானவருடைய ரத்தமும், ஆவியின் பட்டயமாகிய வேத வசனமும் வல்லமையான ஆயுதங்கள் என்பதை அறிந்து, அதைப் பயன்படுத்துகிறோமா? அனேக வேளைகளில் நம்மை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்யும் போது எதிரியிடம் தோற்றுப் போகிறோம். அவனுடைய ஆயுதங்களாகிய மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும் அனேகரை வீழ்த்தி விடுகிறது. அதே வேளையில், கர்த்தருக்குள் நம்மைத் தயார் செயது, அவருடைய சத்துவத்தின் வல்லமையில் பலப்பட்டு எதிரியோடு யுத்தம் செய்யும் போது, எளிதாய் அவனை மேற்கொள்ள முடியும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae