2 யோவா 4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bvPpQBIglmU
பேதுரு, யாக்கோபு, யோவான் மூன்று பேரும், இயேசுவோடு நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்கள். இவர்களிலும் யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தவன். இயேசுவின் இருதய துடிப்பை மற்ற பன்னிரண்டு சீஷர்களை காட்டிலும் நன்றாக தெரிந்தவன். இந்த யோவான், புதிய ஏற்பாட்டில் ஐந்து புஸ்தகங்களை எழுதியவன். யோவான் சுவிசேஷம், மற்றும் 1,2,3 யோவான் நிருபங்கள், வெளிப்படுத்தின விஷேசத்தை எழுதியவன். இவன் எழுதிய எல்லா புஸ்தகங்களிலும் அதிகமாக வலியுறுத்தி சொன்னது ஆண்டவருடைய வார்த்தையை குறித்து என்பதை யோவான் சுவிசேஷத்தின் முதல் வசனத்திலேயே நாம் தெரிந்துகொள்ளலாம். யோவா 1:1 கூறுகிறது, ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பதாய் சுவிசேஷத்தை ஆரம்பிக்கிறான். வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள் என்று யோவான் 5:39ல் கூறுகிறான். நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது என்று யோவான் 6:63ல் எழுதியிருக்கிறான். இப்படியாக பல்வேறு இடங்களில் தேவனுடைய வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த மிகப்பெரிய அப்போஸ்தலன் யோவான் சொல்லுகிறான், பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன் என்பதாக. இதுவே இயேசுவின் இதய துடிப்பாக இருந்ததை, இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தபோது யோவான் அறிந்துகொண்டான்.
தேவஜனங்களே, நாம் ஒவ்வொருருவரும் தேவ வார்த்தைக்கு கொடுக்கும் முதலிடத்தை பொறுத்தே, நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் வளரும். வேதாகமத்தில் எழுதியிருக்கிற சத்தியங்களை எவ்வளவுக்கெவ்வளவு நாம் இருதயத்தில் பத்திரப்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நாம் விடுதலையை பெற்றுக்கொள்ளுவோம். காரணம் வசனம் கூறுகிறது, சத்தியத்தை அறிவீர்கள், அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்பதாக. நாம் சத்தியத்தை கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி நடக்கிறவர்களாக நாம் காணப்பட வேண்டும். நெருக்கடியான சோதனைகள் வரும்போது, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேவ வசனத்திற்கு கீழ்ப்படிந்து பாருங்கள், அப்பொழுது, உங்களுக்குள்ளாக வருகிற சந்தோஷத்தை விவரிக்க முடியாது. என் மகன் நான் போட்ட கோட்டை தாண்டமாட்டான் என்று சில பெற்றோர்கள் மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுவார்கள். அதுபோல தான் நாம் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடப்போமென்றால், நம்முடைய ஆண்டவர் நம்மை குறித்து மிகவும் சந்தோஷப்படுவார். என் ஆடுகள் என் சத்தத்தை அறியும் என்று ஆண்டவர் நம்பிக்கையோடு நம்மை குறித்து சொன்னார். ஆகையால் ஒவ்வொருநாளும் நாம் கர்த்தருடைய சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து அவரை சந்தோஷப்படுத்துவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org