போக்கும் வரத்தும் (Going out and coming in).

பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக, உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான். அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய  இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான் (எண். 10:35,36).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/NC-zmalLvOA

வாழ்க்கை என்பது போக்கும் வரத்துமாய் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வீடுகளை விட்டுப் புறப்படும் போது, திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையோடு செல்கிறோம். அனேக ஆபத்துகளும், மறைவான கண்ணிகளும் வெளியே காணப்படுவதினால் பலர் மரித்துப் போகிறார்கள். இதே சூழ்நிலையில் வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் காணப்பட்டார்கள்.  ஆபத்துகளைப் புரிந்து கொண்ட மோசே தன் ஜனங்களுக்காக  மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களின்படி ஜெபிக்கிறவனாகக் காணப்பட்டான். அவர்களுடைய பிரயாணம், மேகம் எழும்பும் போது துவங்கும். மேகம் சாயங்காலந் தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள், பகலிலாகிலும்  இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள் என்று எண். 9:21 கூறுகிறது. எந்த வேளையில் மேகம் எழும்பினாலும் உடனே மோசே கர்த்தாவே எங்களுக்காய் எழுந்தருளும் என்ற ஜெபத்தை ஏறெடுப்பான். ஆகையால் அவர்களுக்கு முன்பாக ஒரு சத்துருவும் நிற்கமுடியவில்லை, அவர்கள் சத்துருக்கள் சிதறடிக்கப்பட்டு ஓடிப் போனார்கள். தேவப் பிரசன்னம் அவர்களோடு கடந்து சென்றது, ஆகையால் தைரியமாய் காணப்பட்டார்கள். அதுபோல மேகம் நிற்கும் போது, கர்த்தாவே உம்முடைய பிள்ளைகளாகிய எங்களிடத்தில் திரும்பி வந்து எங்களோடு தங்கியிரும் என்று மோசே உருக்கமாக ஜெபிப்பான். ஆகையால் அவர்கள் தாபரங்களில் சமாதானம் இருந்தது, அவர்களுடைய நித்திரையும் இன்பமாக   இருந்தது. அந்த ஜெபம் சுமார் இருபது லட்ச ஜனங்களுக்கு வனாந்தரத்தில் அனுதினமும் பாதுகாப்பைக் கொடுத்தது.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்களும் ஒவ்வொரு நாளும் தனித்தனியாய், குடும்பம் குடும்பமாய் இந்த ஜெபத்தை ஏறெடுங்கள். நீங்கள் புறப்படும் போதும், திரும்பி வந்து தங்கும் போதும் கர்த்தருடைய சமூகம் உங்களோடு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  அப்போது கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கண்மணியைப் போலக் காத்துக் கொள்வார். உன் காலைத் தள்ளாடவொட்டார், உன்னைக் காக்கிறவர் உறங்கார்,  இஸ்ரவேலைக்  காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை, கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார், பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும்  உன்னைச் சேதப்படுத்துவதில்லை என்று வாக்குக் கொடுத்தவர் உங்களோடு கூட இருந்து உங்கள் போக்கிலும் வரத்திலும் உங்களைப்  பாதுகாப்பார். ஒரு ஆபத்துகளும் உங்களைச் சேதப்படுத்தாது, துன்மார்க்கர்களுடைய திட்டங்களுக்கும், தீமை செய்கிறவனுடைய அக்கினி அஸ்திரங்களுக்கும் கர்த்தர் உங்களை விலக்கிக் காப்பார். உங்கள் எதிரிகள் உங்களுக்கு முன்பாக சிதறடிக்கப்பட்டு, ஓடிப்போகிறதை உங்கள் கண்கள் காணும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *