உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக, அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார் (உபா. 9:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Lc2Pe8lDjww
அழிவுக்கு முன்னானது அகந்தை என்பதையும், விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை என்பதையும் கர்த்தருடைய ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இஸ்ரவேல் சபை கானானுக்குள்ளாகப் பிரவேசிக்கப் போகிறார்கள். கானானில் ஏழு ஜாதிகளும், முப்பத்தியொரு ராஜாக்களும் காணப்படுகிறார்கள். அவர்களை தங்கள் சொந்த தேசத்திலிருந்து துரத்தி, கர்த்தர் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்களித்தபடி, அவர்கள் தேசத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கப் போகிறார். யோசுவாவும் அவன் ஜனங்களும் யுத்தம் செய்து கானானியர்களை துரத்தும்படிக்குச் சென்றாலும், அவர்களைத் துரத்துவது கர்த்தர் என்பதை மேற்குறிப்பிட்ட வசனத்திலிருந்து அறிய முடிகிறது. கர்த்தர் அப்படிச் செய்யும் போது, இஸ்ரவேல் ஜனங்கள் எங்கள் நீதியினிமித்தமும், எங்கள் உத்தமத்தினிமித்தமும் (உபா. 9:5) கர்த்தர் அவர்களைத் துரத்தினார் என்று தங்கள் இருதயத்தில் நினைத்து மேட்டிமை கொண்டு விடக்கூடாது என்று கர்த்தர் எச்சரித்தார். கானானியர்களைக் துரத்துவதின் காரணம் அவர்களுடைய ஆகாமியத்தினிமித்தம், அதாவது அவர்களுடைய அக்கிரமங்களினிமித்தம் என்று கர்த்தர் கூறினார். ஜனங்களின் அக்கிரமங்களும் பாவங்களும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற தேசத்தின் மேல் அழிவைக் கொண்டு வருகிறது. சோதோமின் குடிகளின் பாவத்தினிமித்தம் அந்த பட்டணம் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது.
எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? என்று எரே. 17:9ல் எழுதப்பட்டிருக்கிறது. இருதயம் மேட்டிமையானதைச் சிந்திப்பதினால்தான் மேட்டிமையான வார்த்தைகள் வாயிலிருந்து வருகிறது. மேட்டிமை, கர்த்தர் அருவருக்கிற பாவங்களில் முதன்மையானது. லூசிபரின் இருதயம் மேட்டிமைக் கொண்டதின் நிமித்தம் கர்த்தர் அவனை அவருடைய சமூகத்திலிருந்து தள்ளினார் என்பதைத் தேவ ஜனங்கள் மறந்து விடக்கூடாது. இந்நாட்களில் விசுவாசிகள், ஊழியர்கள் மத்தியில் மேட்டிமையின் ஆவி அதிகமாய் கிரியைச் செய்கிறது. கர்த்தர் கொடுத்த அழைப்பையும், கிருபை வரங்களையும் மேட்டிமை சிந்தையோடு பயன்படுத்துகிறவர்கள் உண்டு. அகந்தை நம்மைத் தாழ்த்தும் என்ற உணர்வோடு கர்த்தருடைய ஜனங்கள் வாழவேண்டும். எனது நீதியின் நிமித்தமும், எனது உத்தமத்தின் நிமித்தமும் குறிப்பிட்ட காரியத்தில் கர்த்தர் எனக்கு வெற்றியைக் கொடுத்தார் என்று நினைத்து விடக்கூடாது. நம்முடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல ஆண்டவருடைய பார்வையில் காணப்படுகிறது என்று ஏசாயா 64:6 கூறுகிறது. ஆகையால் அக்கிரமங்களை வெறுத்து, தாழ்மையின் சிந்தையோடு வாழுங்கள், அப்போது கர்த்தர் உங்கள் எதிரிகளைத் துரத்தி, உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae