கொஞ்சம் புளித்தமா (Little leaven).

நீங்கள் மேன்மை பாராட்டுகிறது நல்லதல்ல, கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? (1 கொரி. 5:6)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0VhAXBrGAms

சிறிய காரியங்கள் பெரிய தாக்கத்தை, நன்மையாகவும் தீமையாகவும் ஏற்படுத்தும். கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாய் இருக்கும் போது, அனேகத்தில் மேல் அதிகாரியாய் காணப்படமுடியும். அற்பமான துவக்கமாய் காணப்படும், ஆனால்    முடிவு சம்பூரணமாய் இருக்கும்.  அதுபோல சிறிய பாவம் பெரிய தோல்வியைக் கொண்டுவரும்.  ஆகான் என்ற ஒரு நபருடைய பாவம் முழு இஸ்ரவேல் சபைக்கும் தோல்வியைக் கொண்டு வந்தது. ஒரு செத்த ஈ தைலக்காரனுடைய முழு பரிமளதைலத்தையும் நாறிக் கெட்டுப் போகும் படிக்குச் செய்யும். குழி நரிகளும் சிறு நரிகளும் ஒரு பெரிய தோட்டத்தையே அழித்துவிடும். அதுபோல கொஞ்சம் புளித்தமா, பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்கும். 

வேதத்தில் புளிப்பு என்பது பாவத்திற்கு அடையாளமாகக் காணப்படுகிறது. பஸ்கா பண்டிகையின் நாட்களில் ஏழு நாட்கள் இஸ்ரவேல் ஜனங்கள் புளிப்பில்லாத அப்பத்தைப் புசிக்க வேண்டும். அந்த நாட்களில் புளிப்பு என்ற பாவம் அவர்களுடைய எல்லையில் கூட காணப்படக் கூடாது. அவர்கள் ஆட்டுக்குட்டியை அடித்து அதின் இரத்தத்தை எடுத்து வீடுகளின் நிலைக்கால்களிலும்  மேற்சட்டத்திலும் பூசவேண்டும், அதின் மாம்சத்தை  நெருப்பினால்  சுட்டுப் புசிக்க வேண்டும். அது எகிப்திலிருந்து கர்த்தர் அவர்களை விடுதலையாக்கினதை நினைவு கூறுகிற பண்டிகையாகும்.

இயேசு நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகக் காணப்படுகிறார். அவர் பாவம் என்னும் புளிப்பு கொஞ்சம் கூட இல்லாதவராய், மாசற்றவராய், குற்றமில்லாதவராய், பழுதற்றவராய். நமக்காகச் சிலுவையில் அடிக்கப்பட்டார். நம்முடைய பாவம் என்னும் புளிப்பிலிருந்து நமக்கு முழுமையான விடுதலையைத் தருவதற்கு தன்னுடைய இரத்தத்தைச்  சிலுவையில் ஊற்றிக் கொடுத்தார். நமக்குள் காணப்படுகிற பழைய புளித்தமாவைப் போன்ற கோபம், எரிச்சல், பொறாமை, மேட்டிமை, அகந்தை, அசுத்தம், தூற்றித்திரிதல் போன்ற எல்லா துர்க்குணங்களும்  நம்மை விட்டு நீங்கும் படிக்கு அவர் கல்வாரிச் சிலுவையில் ஜீவனைக் கொடுத்தார். அவர் சிந்தின இரத்தம் நம்மை பாவங்களறக் கழுவி, குற்ற மனசாட்சியிலிருந்து விடுவித்து, நம்மை நீதிமான்களாய் மாற்றுகிறது. அநியாயஞ்செய்கிறவன்  இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும், இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது என்று வெளி. 22:11,12 கூறுகிறது. ஆகையால் எல்லாவித பாவமாகிய புளிப்புகளை நம்மை விட்டு முற்றிலுமாய் அகற்றி பரிசுத்தமாய் ஜீவிக்க நம்மை அர்ப்பணிப்போம், இம்மைக்குரிய மறுமைக்குரிய ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்போம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *