சிலுவையிலறையப்படுதல் (Crucifixion)

கலா 2:20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_qsevLE9s50

கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அதிகமான ரன்னை குவித்தால், சிலர் சொல்லுவார்கள் இந்த வீரர் மரண அடி அடித்தார் என்பதாக. அதுபோல தான் மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனுக்கு மரண அடி கொடுக்கப்பட்ட இடம் தான் சிலுவை. இயேசு சிலுவையிலறையப்பட்டு, மரணத்திற்கு மரண அடி கொடுத்ததால் தான், நித்தியத்திற்கான வாசலும், இரட்சிப்பிற்கான வாசலும் திறக்கப்பட்டது. தேவாலயத்தின் திரைசீலை கிழிக்கப்பட்டு, தேவனோடு நெருங்கி ஜீவிக்கும் கதவு நமக்கு திறக்கப்பட்டது.

சிலுவையிலறையப்படுதலில் நம்முடைய பங்கும் காணப்பட வேண்டும். அப்படியென்றால், நாமும் இயேசுவைபோல, சிலுவையில் தொங்கி ஜீவனை விடவேண்டும் என்று அர்த்தமில்லை. நம்முடைய சுயம், மாம்சம் போன்றவற்றை அறைய ஒப்புக்கொடுப்பது தான் சிலுவையிலறையப்படுதல் என்று அர்த்தமாய் காணப்படுகிறது. சபையில் பலவருட கிறிஸ்தவர்களாக இருந்தாலும், சுயம் சாகவில்லையென்றால், சிலுவையிலறையப்படுதலில் நீங்கள் இன்னும் பங்கடையவில்லை என்று தான் அர்த்தம்.

கலா 6:14ல் பவுல் கூறுகிறான், நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். அதாவது, நம்மை சுற்றியுள்ள உலகம், உலகத்தின் ஆசை, உலகத்தின் கவர்ச்சி, உலகத்தின் ஆடம்பரங்கள், உலகம் காட்டுகிற நயவஞ்சகம், உலகம் காட்டுகிற பொழுதுபோக்குகள் கேளிக்கைகள் போன்றவைகளை வெறுத்து, கிறிஸ்து காட்டுகிற வழியில் நடப்பதும், கிறிஸ்துவை மேன்மைபாராட்டுவது தான் சிலுவையிலறையப்படுதல்.

ரோம 6:6 கூறுகிறது, நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம் என்பதாக. அதாவது, நமக்குள் இருக்கும் பழைய மனுஷனின் சுபாவங்கள், மேட்டிமை, இச்சை, குடிவெறி போன்ற எல்லா பாவங்களுக்கும் மரித்து தேவனுக்கென்று பிழைத்திருப்பதும், தேவனுடைய இராஜ்ஜியத்துக்கடுத்தவைகளையே சிந்தித்தும் செயல்படுத்துவதும் தான் சிலுவையிலறையப்படுதல்.

கொலோ 2:15 கூறுகிறது, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார் என்பதாக. அதாவது, நமக்கு கீழிருக்கும் எல்லா பொல்லாத துரைத்தனங்கள் அதிகாரங்களை முறியடித்து ஜீவிப்பதே சிலுவையிலறையப்படுதல்.

இப்படி, இயேசுவோடு சிலுவையிலறையப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால், எபே 1:3ன் படி, கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது, சிலுவையிலறையப்பட்டால், நமக்கு மேலே இருக்கும் சகல ஆசீர்வாதமும் நமக்கு கிடைக்கும்.

ஆகையால், நம்மை சுற்றியுள்ள உலகத்தையும், நமக்குள்ளிருக்கும் பழையமனுஷனையும், நமக்கு கீழிருக்கும் துரைத்தனங்களையும் சிலுவையிலறைந்தால், நமக்கு மேலிருக்கும் சகல ஆசீர்வாதங்களும் கிடைக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *