பிசாசு பிடித்திருந்தவளுக்கு முதல் தரிசனம் (The first vision to the demon-possessed woman)

மாற் 16:9-11 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/EmKDpB7VYh0

இயேசு உயிரோடு எழுந்து பரமேறி செல்வதற்கு முன், நாற்பது நாட்களில், பத்து முறை தரிசனமானார்; தன்னை உயிர்தெழுந்தவராக சீஷர்களுக்கும் மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தினார்.

இயேசு உயிரோடெழுந்தபிறகு, முதன்முதலில் மகதலேனா மரியாளுக்கு காட்சிகொடுத்தார். இவளிடம் ஏழு பிசாசுகள் இருந்தது (லுக் 8:2). ஒன்றிரெண்டு பிசாசுகள் ஒருவனை பிடித்தாலே, அவனுடைய வாழ்க்கை கதிகோலமாக மாறிவிடும். ஆனால், மகதலேனா மரியாளுக்கோ ஏழு பிசாசுகள் பிடித்திருந்தது. அவள் பிசாசு பிடிக்கப்பட்டவள் என்று ஊராரால் அறியப்பட்டவள். அவளிடம் நெருங்கி வந்தால், அவளை பிடித்த பிசாசு நம்மையும் பிடித்துவிடும் என்ற அச்சத்தில் ஒருவரும் அவள் அருகே வராமல் இருந்திருப்பார்கள். அவள் தனித்துவிடப்பட்டவளாக தான் காணப்பட்டிருப்பாள். இப்படிப்பட்ட பின்னணியிலுள்ள ஒரு பெண்மணிக்கு, இயேசு முதன்முதல் தன்னை வெளிப்படுத்தினதே ஆச்சரியமான காரியமாய் காணப்படுகிறது.

உயிரோடெழுந்த இயேசு, மரியாளுக்கு முதன் முதல் தரிசனமாகி சொன்ன வார்த்தை, இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் (யோவா 20:15) என்று கேட்டார். நம்முடைய ஆண்டவர் எவ்வளவு கரிசனையுள்ளவர் என்பதை பாருங்கள். தாகத்தோடு, கண்ணீரோடு இயேசுவை நீங்கள் தேடுவீர்களென்றால், உங்களை பார்த்தும் இயேசு சொல்லுகிற வார்த்தை, நீ ஏன் அழுகிறாய் என்றே கேட்கிறார். உங்கள் அழுகையை ஆனந்த களிப்பாக மாற்றவே இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இனி நீங்கள் அழுதுகொண்டிருக்க தேவையில்லை, காரணம் உங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றுகிறவர் உயிரோடிருக்கிறார்.

மாத்திரமல்ல, இயேசு அவளை பார்த்து சொன்னார், நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார் (யோவா 20:17). அண்ட சராசரங்களையும் படைத்தவர், பொன்னும் பொருளும் என்னுடையது என்றவர், காண்கிற அனைத்திற்கும் சொந்தக்காரர், எப்படி தான் நம்மை சகோதரர் என்று கூறமுடிந்ததோ, தெரியவில்லை. அவர் நம்மை சகோதரர் என்று சொல்ல வெட்கப்படவில்லை. சாதாரண ஆடைகள் அணிந்திருப்பவருக்கு அருகில் உட்கார வெட்கப்படும் ஜனங்கள் இந்த உலகில் ஏராளமானோர் உள்ளார்கள். ஆனால், மரித்து உயிரோடு எழுந்த இயேசு, நம் ஒவ்வொருவரையும் சகோதரர் என்று அழைத்தார். இயேசு நம்முடைய மூத்த சகோதரர். ஆகையால் தான் சங் 22:22ல் கூறுகிறார், உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன் என்பதாக.

ஆகையால், உயிர்த்தெழுந்த இயேசு, உங்கள் வீட்டில் இருக்கும் மூத்த சகோதரனாக, முதன் முதலில் உங்களிடம் சொல்லுவது, நீங்கள் இனி அழவேண்டாம். சங்கீதக்காரன் சொல்லுகிறான், அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார் (சங் 6:8) என்ற வசனத்தின்படி, உங்கள் அழுகையை கேட்டு, உங்கள் கண்ணீரை இயேசு துடைப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *