நம்மை பாதுகாக்கும் தேவன் (God is our protector).

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.  சங்கீதம் 91 : 11.

For audio podcast of this Manna Today, please click the link,

     ஒருமுறை நான் பைக்கில் ( Bike ) பிரயாணப்பட்டு போய்க்கொண்டிருந்தபோது சாலையில் எனக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அரசாங்கப் பேருந்தை ( Government Bus ) முந்தி விடலாம் என்று எண்ணி வேகமாக சென்றேன் அப்போது நான் எதிர்பாராத விதமாக எனக்கு எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த லாரியானது ( Lorry / Truck ) மிகவும் வேகமாக வந்ததால் நான் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போனேன். ஆனாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த சூழ்நிலையில் நான் எப்படிப் பாதுகாக்கப்பட்டேன் என்பதை புரிந்து கொள்ளவே முடியாதபடி கர்த்தர் கிருபையாய் என்னைப் பாதுகாத்தார். உங்களுடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்டதான இக்கட்டான பாதைகளை நீங்கள் கடந்து வந்திருக்கலாம். சிலநேரங்களில் நம்முடைய பெற்றோர்களாலும், பிள்ளைகளாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் நமக்கு உதவி செய்ய முடியாதபடி சில சூழ்நிலைகள் நமக்கு வந்திருக்கும். சில வேளைகளில் நாமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாதபடி இக்கட்டில் மாட்டிக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய கர்த்தரோ பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது ( சங்கீதம் 91 : 10 ) என்ற வசனத்தின்படி ஒவ்வொரு நாளும் நம்மை பாதுகாத்து நடத்துகின்றார்.

     வேதத்திலும் மோசே பிறப்பதற்கு முன்பாகவே பார்வோன் ராஜா எகிப்து தேசத்தில் பிறக்கின்ற ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோடும்படி கட்டளையிட்டார். ஆனாலும் மோசேயின் தாய் மூன்று மாதங்கள் அவரை ஒளித்துவைத்தாள், அதற்குமேல் ஒளித்துவைக்கக் கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள். அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள். அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு , தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்து அந்தப் பிள்ளையை தனக்கென்று வளர்த்திட சொன்னாள். இவ்வாறு எந்தப் பார்வோன் பிறக்கின்ற ஆண் குழந்தைகளையெல்லாம் கொன்று போடும்படி கட்டளையிட்டானோ அதே பார்வோனுடைய வீட்டில் மோசே வளர்க்கப்பட்டார். அந்த மோசேயைக் கொண்டுதான் முழு இஸ்ரவேல் ஜனங்களையும் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து கானானுக்கு நேராக நடத்திக் கொண்டு வந்தார். இதுதான் மோசே அவர்களைக் குறித்த தேவனுடைய பெரிதான சித்தமாய்க் காணப்பட்டது.

     இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நாளும் நமக்கு எதிராய் வருகின்ற எல்லாவித இக்கட்டுகளிலிருந்தும் நம்மை பாதுகாத்து நடத்துகின்ற தேவனுடைய சித்தம் நிறைவேற நம்மை அவருடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து, அவருடைய இருதயத்திற்கு ஏற்ற வாழ்க்கை வாழ நம்மை அர்ப்பணிப்போம்.

     கர்த்தருடைய பிரியமும், கிருபையும், ஆசீர்வாதமும் என்றென்றைக்கும் நம் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்

Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *