ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.ஈசாக்கை கர்த்தர் நூறு மடங்கு ஆசிர்வதித்தார். ஆதியாகமம் 26 : 12,13
ஆண்டவர் ஈசாக்கிடம் நீ எகிப்துக்கு போகாமல் நான் உனக்கு காண்பிக்கும் தேசத்தில் குடியிரு என்று சொன்னார். ஈசாக்கு அவருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்தான். முக்கியமான காரியம் என்னவென்றால், ஈசாக்கு கர்த்தர் சொன்ன தேசத்தில் விதை விதைத்தான். ஒருவேளை அவன் எகிப்து தேசத்தில் விதை விதைத்திருந்தால், கர்த்தருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளாமல் போயிருக்க கூடும். மாறாக, அவன் செய்த காரியம் கர்த்தர் சொன்ன தேசத்தில் விதைத்தான். அதை கர்த்தர் நூறு மடங்கு ஆசிர்வதித்தார். அதுவும் அந்த வருஷத்தில் அதாவது அதே வருஷத்தில் நூறு மடங்கு அவனை கர்த்தர் பெருகப்பண்ணினார். கர்த்தர் அவனுக்கு கொடுத்த ஆசீர்வாதம் அந்த வருஷத்தில் மாத்திரம் முடிந்துவிடவில்லை; அவன் வர வர விருத்தியடைந்து அதாவது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருசமும் விருத்தியடைந்து பெருகினான். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெலிஸ்தியருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஈசாக்கை பார்த்து நிச்சயமாய் கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றும் நீர் கர்த்தரால் ஆசிர்வதிக்க பட்ட பாத்திரம் என்றும் சொன்னான்.
கர்த்தர் உங்களை நூறு மடங்கு ஆசிர்வதிக்க வேண்டுமென்றால், நீங்கள் செய்ய வேண்டிய காரியம், கர்த்தர் சொல்லுகிற இடத்தில் விதைக்க வேண்டும்.
நீங்கள் விதைக்கிற எந்த காரியமாக இருந்தாலும் அது உலகத்துக்குரிய அதாவது உங்கள் தொழில் காரியங்கள், உங்கள் வேலை காரியங்கள் என்று எதுவாக இருந்தாலும் கர்த்தர் சொல்லுகிற இடத்தில் அவர் சொல்லுகிற பிரகாரமாக செய்யுங்கள்.
ஒரு வாலிப மகன் ஒருமுறை அவன் எதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற ஆவலோடு தன்னிடம் இருந்த பணத்தை வைத்து, கர்த்தரிடத்திலிருந்து வார்த்தையை பெற்றுக்கொள்ளாமல் ஆரம்பித்தான். அந்நிய நுகத்தில் பிணைக்கப்படாதிருப்பாயாக என்று கர்த்தர் அவனோடு பேசியும், அதை கேளாமல் பங்குதாரர்களிடம் சேர்ந்து ஆரம்பித்தான். கடைசியில் அவனுக்கு கிடைத்தது மிகுந்த ஏமாற்றம். மிகுந்த நஷ்டத்தில் அந்த தொழில் மூடப்பட்டது.
நீங்கள் விதைக்கிற விதை நல்ல நிலத்தில் விதைக்கப்படும் என்றால் கர்த்தர் அதை முப்பதும், அறுபதும், நூறுமாகவும் பெருகப்பண்ணுவார்.
மாத்திரமல்ல கர்த்தருடைய ஊழியத்திற்கென்று விதைக்கிற காணிக்கையாக இருந்தாலும், அதனிமித்தமாக கர்த்தர் உங்களை வர்த்திக்க பண்ணுவார்.வசனம் சொல்லுகிறது நீங்கள் அளக்கிற அளவின்படி அளக்கப்படுவீர்கள்.
கொரிந்து சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது,
II கொரிந்தியர் 9:6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
இயேசு ஜெப ஆலயத்தில் இருக்கும்போது காணிக்கை போடுகிறவர்களை அதாவது விதைக்கிறவர்களை கவனித்துக்கொண்டிருந்தார். ஐசுவரியவான்கள் அதிகமாக போட்டார்கள்; ஆனால் அதே இடத்தில் ஒரு ஏழை விதவை தன்னுடைய ஜீவனத்துக்கு உரிய எல்லாவற்றையும் போட்டுவிட்டாள் அதாவது விதைத்தாள். இயேசு சீஷர்களை அழைத்து அந்த ஐசுவரியவங்களை அல்ல, ஏழை விதவையையே மெச்சிக்கொண்டார்.
நல்ல நிலத்தில் விதையுங்கள், அவர் சொல்லுகிற இடத்தில் விதையுங்கள், உத்தமமாய் விதையுங்கள், உற்சாகத்தோடு விதையுங்கள்; அப்படி செய்வீர்களென்றால், கர்த்தர் உங்களை வர்த்திக்கப்பண்ணுவார். உங்களை பெருகப்பண்ணுவார். உங்களை நூறு மடங்கு ஆசீர்வதிப்பார்.
II கொரிந்தியர் 9:10 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்களை நூறு மடங்கு ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org